புதுமுகங்கள் விஷ்ணு பிரகாஷ், அர்ச்சனா சிங் நடித்துள்ள ‘புயலில் ஒரு தோணி’ படத்தை ஈசன் இயக்க, ‘பி.ஜி.பிக்சர்ஸ்’ ரோமிலா நல்லையா தயாரித்துள்ளார்.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைத்துள்ளார். அவர் இசையமைத்த கடைசித் திரைப்படம் இது.
படம் பற்றி இயக்குநர் ஈசனிடம் பேசியபோது, பெண்களுக்கு ஆதரவான ஒரு குரலாக இந்தப்படம் உருவாகியிருக்கிறது. நான் கதையை தேர்வு செய்யும் முன்பாகவே படத்துக்கு பவதாரிணிதான் இசையமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.
முழுபடத்தையும் முடித்த பின்பு பவதாரிணியை நேரில் சந்தித்து முழு படத்தையும் திரையிட்டு காட்டினேன். அவருக்கும் மிகவும் பிடித்து போனது. படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள். இரண்டையும் கவிஞர் சினேகன் எழுதியுள்ளார். இரண்டு பாடல்களையும் பவதாரிணி மிக விரைவாகவே கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்.
ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் குமாரும், மானசியும் பாடியுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். பாடல்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். பின்னணி இசையையும் பவதாரிணி மிக நேர்த்தியாக அமைத்துள்ளார்.
இந்த நிலையில் அவரது மரணம். அவர் இல்லை என்பதை இப்போதும் நம்பமுடியவில்லை. எங்கள் திரைப்படத்தின் மிக பெரிய பலம் அவரது இசை. படம் விரைவில் வெளியாகும். அதன் வெற்றியை அவருக்கு அர்ப்பணிப்போம்” என்றார்.