யோகி பாபு, கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில், அவர் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் பார்க்க கூடிய கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ஒர்க்கிங் ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண்குமார் தயாரிக்கிறார்.
இதுவரை மக்கள் பார்க்காத புதிய தோற்றத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் யோகிபாபுவுக்கு ஜோடியாக சிம்ரன் ராஜ், செளமியா, பிரியா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி முருகேஸ்வர காந்தி இயக்கும் இப்படத்திற்கு கெளதம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெப்ரி இசையமைக்கிறார்.
நல்ல கதைக்களம் கொண்ட மிகப்பெரிய காமெடி திருவிழாவாக மட்டும் இன்றி, மக்களை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைக்ககூடிய படைப்பாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. முன்னதாக படத்தின் துவக்க விழா கடந்த அக்டோபர் 22; 2024 அன்று பூஜையுடன் நடைபெற்றது.
படக்குழுவினருடன் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.
நிகழ்வில் படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் அருண்குமார், “நாங்கள் பல வருடங்களாக திரைத்துறையில் பைனான்ஸ் செய்துக் கொண்டிருக்கிறோம். திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு, தற்போது அது நிறைவேறியிருக்கிறது. யோகி பாபு சாரை கதையின் நாயகனாக வைத்து நாங்கள் தயாரிக்கும் முதல் படமான ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ குடும்பத்துடன் பார்க்க கூடிய காமெடி கமர்ஷியல் படமாக இருக்கும். இந்த படத்தை தொடர்ந்து இன்னொரு படமும் தயாரிக்கவிருக்கிறோம், அதன் விவரங்களை விரைவில் தெரிவிக்கிறோம்” என்றார்.
படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான சிம்ரன் ராஜ் பேசியபோது, “மத்தகம் இணையத் தொடர் மற்றும் சில திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறேன். யோகி பாபு சாருடன் கதாநாயகியாக நடிப்பது மகிழ்ச்சி. இந்த படம் கலகலப்பான படமாக இருக்கும்” என்றார்.