கே.பாக்யராஜ் சி.பி.ஐ அதிகாரியாக நடிக்க, சித்திரைசெல்வன் இயக்கும் ‘லைக் லவ் லஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் பிரியதர்ஷினி.
ஹரிஸ் கல்யாண் நடிக்கும் ‘டீசல்’ படத்தில் பேசும் திறனற்ற பெண்ணாகவும் ‘பிக்பாஸ்’ அமீர் ஜோடியாக ஒரு படத்திலும், மலையாளத்தில் வெளியான ‘ஜோசப்’ படத்தின் தமிழ் பதிப்பில் ஆர்.கே.சுரேஷ் மகளாகவும், ‘சாட்டை’ அன்பழகன் இயக்கத்தில் விதார்த் நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
வசந்தபாலன் இயக்கிய ‘அநீதி’ படத்தில் கதாநாயகி துஷாராவின் தங்கையாக நடித்துள்ள பிரியதர்ஷினி, வசந்தபாலன் இயக்கிய ‘தலைமைச்செயலகம்’ வெப்சீரிஸில் முதலமைச்சரின் மருமகள், சேரன் இயக்கிய ‘ஜர்னி’ வெப்சீரிஸில் பிரசன்னா நீட் படிக்க வைக்கும் பெண் என சில படங்களிலும், வெப்சீரிஸிலும் நடித்திருக்கிறார்.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே தீபாவளியை இனிப்பு, வெடி, மத்தாப்பு என்று கொண்டாடியவர் இந்த ஆண்டு தீபாவளியை பயனுள்ள வகையில் கொண்டாட முடிவு செய்தார்.
அதன்படி தனது தீபாவளி செலவுக்கான தொகையை கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு உதவுவது என்று தீர்மானித்தவர், விழுப்புரத்தை சேர்ந்த எம்.ஏ. படித்து வரும் பார்வையற்ற பட்டதாரி மாணவி சங்கீதா என்பவரை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து அவருக்கு இனிப்பு, பழம், உடைகள் மற்றும் பத்தாயிரத்துக்கான காசோலையை வழங்கி தீபாவளியை கொண்டாடினார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது “புகையில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று நினைத்தேன். மற்றவர்க்கும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். தோழிகளுடன் ஜாலியாக சுற்றுவது, பொழுபோக்குக்காக செலவு செய்வது என்றால் எனக்கு பிடிக்காது. அந்த செலவு பணத்தை யாருக்காவது உதவ வேண்டும் என்று ஆசைப்படுவேன். அந்த நல்ல எண்ணத்தில்தான் இந்த ஆண்டிலிருந்து தீபாவளிக்கு ஆகும் எனது செலவை மற்றவர்க்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அதன்படி சங்கீதாவை வரவழைத்து ‘ஜெயம் சாரிட்டபிள் அறக்கட்டளை’ மூலமாக உதவி இருக்கிறேன். இது ஒரு சிறிய உதவிதான். சங்கீதாவின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியை பார்க்கும் போது எனக்கு அர்த்தம் உள்ள வாழ்க்கை வாழ்வதாக மனதுக்குள் ஒரு நிறைவை தருகிறது” என்றார்.