கிளைமாக்ஸ் வரை யாராலும் எந்தவிதத்திலும் யூகிக்க முடியாத திருப்பத்தை தக்கவைத்து, பெட்ரோல் கிணற்றில் தீ பிடித்தது போன்ற பரபரப்புடன் பயணிக்கிற திரைக்கதையுடன் உருவாகியிருக்கிற சஸ்பென்ஸ் திரில்லர்.
ஒரு பெரியவர் எட்டு லட்ச ரூபாயுடன் திடீரென காணாமல் போய்விட, அவரை கண்டுபிடிக்க களமிறங்கும் போலீஸுக்கு, இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட அதற்கான விசாரணையும் சூடுபிடிக்கிறது.
கொலையான பெண்ணுக்கும் காணாமல் போனவருக்கும் என்ன தொடர்பு கொலையைச் செய்தது யார்? காணாமல் போனவருக்கு என்ன நேர்ந்தது? இப்படியான கேள்விகள் மனதில் உருவாக, அதற்கெல்லாம் பதில் சொல்லும்படி நொடிக்கு நொடி எதிர்பார்ப்பை உருவாக்கும் காட்சிகளால் நிரம்பியிருக்கிறது ஒரு நொடி.
லோக்கல் ரவுடிப் பேர்வழியின் மிரட்டல், எம்.எல்.ஏ.வின் அதட்டல் என எதற்கும் பயப்படாமல் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டுகிற காவல்துறை உயரதிகாரி தமன் குமாரின் கம்பீரமான தோற்றமும் அதற்கேற்ற தோரணையும் அசத்துகிறது.
கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல் அவமானப்படுவது, பணம் கிடைத்ததும் திருப்பிச் செலுத்த உற்சாகமாக கிளம்பிப் போவது என சில காட்சிகளில் வந்தாலும் வழக்கம்போல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.
அப்பாவிகளிடமிருந்து அசையா சொத்தை அடாவடியாக அபகரிக்கும் ரவுடியாக வேல ராமமூர்த்தி, அவருக்கு ஆதரவாக செயல்படுகிற எம்.எல்.ஏ.வாக பழ கருப்பையா என முதன்மைப் பாத்திரங்களை ஏற்றிருப்பவர்கள் தேர்ந்த நடிப்பைத் தர,
எம்.எஸ். பாஸ்கருக்கு மனைவியாக ஸ்ரீரஞ்சனி, நண்பராக கஜராஜ், வழக்கு விசாரணையில் தனது புத்திசாலித்தனத்தால் உயரதிகாரிக்கே வழிகாட்டுகிற கருப்பு நம்பியார், அவர்களோடு சற்றே கெளரி கிஷன் சாயலில் இருக்கிற நிகிதா, நிகிதாவின் பெற்றோராக அழகர், தீபா சங்கர் என அத்தனை நடிகர், நடிகைகளும் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடித்திருக்க கதைக்களம் வலுவடைந்திருக்கிறது.
கிட்டத்தட்ட அத்தனை காட்சிகளிலும் விறுவிறுப்பு தொற்றிக் கொண்டிருக்க, அவற்றுக்கு தன் பின்னணி இசையால் சுறுசுறுப்புத் தீ மூட்டியிருக்கிறார் சஞ்சய் மாணிக்கம்.
‘ஜீரக பிரியாணி’ ஜெகன் கவிராஜும் சிவசங்கரும் தந்திருக்கும் பாடல் வரிகள், இதமான இசையில் மூழ்கியெழுந்திருக்கின்றன.
காவல்துறையில் நேர்மையான உயரதிகாரிக்கு அதே நேர்மையோடு செயல்படுகிற அடுத்தகட்ட அதிகாரிகள் கிடைப்பதெல்லாம் நிஜத்தில் சாத்தியமில்லை; சினிமாவிலும் ந்டப்பதில்லை. ஆச்சரியம்… அந்த விஷயம் இந்த படத்தில் சாத்தியமாகியிருக்கிறது.
வித்தியாசமான கதையாலும் விறுவிறுப்பான திரைக்கதையாலும் யூகிக்க முடியாத கிளைமாக்ஸாலும் ஒரு நொடி சஸ்பென்ஸ் திரில்லர் பட வரிசையில் உயர்ந்திருக்கிறது பல படி!
Rating 4/5