ஒரு இளைஞன். அவனது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்கு பல லட்சங்கள் தேவைப்படுகிறது. ஒரு பெரிய குற்றத்தை செய்தால், அந்த பணம் கிடைக்கிற வாய்ப்பு.
ஒரு அப்பா, சாதிவெறி பிடித்தவர். மகளின் காதலுக்கு எதிரியாகி, ஆணவக் கொலைக்குத் தயாராகிறார்.
ஒரு இளம்பெண். அவளுக்கு தாலி கட்டியவன் தோற்றத்தில் மட்டுமே ஆண்; ‘அந்த’ விஷயத்தில் வீண். அதை தெரிந்து அவள் அதிர்ச்சியடைகிறபோது, தனக்கு நடந்திருக்கும் வேறொரு கொடுமையும் தெரியவருகிறது. அவள் கோபத்தில் கொந்தளிக்கிறாள்.
ஒரு அம்மா, துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். திருநங்கையாக மாறிவிட்ட தன் மகனை ஒதுக்கி வைக்காமல், அன்பால் அரவணைக்கிறாள். அவனை டாக்டராக்கிவிட வேண்டும் என்ற லட்சியத்தோடு வளர்க்கிறாள். அந்த திருநங்கையை ஒருவன் காமப்பசியோடு அணுகி குரூரமாக நடந்து கொள்கிறான். அந்த அம்மாவுக்கு ஆத்திரமும் ஆவேசமும் பொங்குகிறது.
இப்படியாக நான்கு கதைகள்… அவற்றில் சம்பந்தப்பட்ட இளைஞன், அப்பா, இளம்பெண், அம்மா என நான்கு பேரிடமும் துப்பாக்கி கிடைக்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை… ஒவ்வொருவர் கைக்கும் துப்பாக்கி வந்த விதம் அட போட வைக்கிறது. இயக்கம் பிரசாத் முருகன்
ஒரு உயிரைக் காப்பாற்ற இன்னொரு உயிரை எடுக்கும் நிலையில் பரத்,
மகளை ஒழித்துக் கட்டப் போகும்போது அவளைக் காதலித்தவனே நேரில் வந்து அருகில் அமர்ந்து பேசும்போது பதட்டத்தின் உச்சத்துக்கு போகிற தலைவாசல் விஜய்,
கணவன் அப்பாவியாகிவிட கணவனின் குடும்பம் செய்த சதியால் மனம் நொறுங்கி, பின் தைரியம் பெருகி நிற்கிற அஞ்சலி நாயர்,
கொடுத்த கடனை வசூலிக்க வந்து, தன் வாரிசை துன்புறுத்தியவனை பழி வாங்க புறப்படும் அபிராமி என முதன்மை பாத்திரங்களைச் சுமந்திருப்பவர்கள் கதைக்கேற்ற உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் விதம் கச்சிதம்.
சாதி மாறி காதலித்து அதை தன் அப்பாவிடம் துணிச்சலாகச் சொல்லும் பவித்ராலெஷ்மி, மருமகளுக்குத் துரோகம் செய்யும் அருள் சங்கர், சப்போர்ட்டிங் வில்லனாக ஒரு சில காட்சிகளில் தோன்றி நிறைவில் ‘இனி நான்தான் இங்கே எல்லாம்’ என்கிற ரீதியில் கெத்து காட்டும் ஜெகன் கவிராஜ் என மற்றவர்களின் நடிப்பாலும், ஜோஸ் பிராங்க்ளினின் பின்னணி இசையாலும், காளிதாஸ் _ கண்ணா கூட்டணியின் ஒளிப்பதிவிவாலும் கதைக்களம் பலமாகியிருக்கிறது.
ஒன்ஸ் அபான் எ டைம் – பார்க்கலாம் ஒன் டைம்!