பேய்ப்படங்கள் என்றாலே அதன் கதை மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதியிலுள்ள பங்களாவுக்குள் சிலர் சிக்கிகொள்ள, அவர்களைக் கொல்ல அங்கிருக்கும் பேய் அல்லது பேய்கள் சுற்றி வளைக்க, சிக்கிக் கொண்டவர்கள் அந்த பேய்களிடமிருந்து தப்பிக்க போராடுவதாக அமைவதே வழக்கம். அதிலிருந்து மாறுபட்டு சில படங்கள் வருவதுண்டு. அந்த வரிசையில் தமிழ் சினிமாவுக்கு 2023-ம் வருட கடைசி வாரத்தின் புதுவரவு ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.’
பலான படம் ஓடும் அந்த தியேட்டரில் சில இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் ஒன்றிரண்டு பேர், இரண்டு இளம்பெண்கள், ஒரு நடுத்தர வயது நபர், ஒரு கள்ளக் காதல் ஜோடி என 13 பேர் சில பேய்களின் பிடியில் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்கிற அளவுக்கு சிக்குகிறார்கள்.
பேய்களாக வருபவர்கள் ‘நாங்கள் உயிருடன் இருந்தபோது, எங்களை சுயநலத்துக்காக கொன்ற ஆசாமியை கொண்டு வந்து ஒப்படைத்தால் உங்களை உயிருடன் விடுகிறோம்’ என்று சொல்ல கதையில் பரபரப்பு கூடுகிறது.
கொலைகாரனை அந்த 13 பேரால் கொண்டுவர முடிந்ததா? பேயாக திரிகிறவர்கள் கொலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன? என்பதையெல்லாம் விவரிக்கிறது திரைக்கதை. இயக்கம் ரமேஷ் வெங்கட்
பரிதாபங்கள் கோபி, சுதாகரோடு சந்தோஷ், அகஸ்டின், ஜெயசீலன், விஜய், சாரா, அப்துல் என யூ டியூப் பிரபலங்கள், தப்புத்தண்டா’ படத்தில் நடித்த சத்யமூர்த்தி என சிலரது நடிப்பு பங்களிப்பு படம் முழுக்க தொடர்கிறது. கூடவே யாஷிகா ஆனந்த், ஹர்ஜியா, கிரேன் மனோகரும் வருகிறார்கள். விஜே ஆஷிக்கும் இணைந்திருக்கிறார். எல்லோருமாக சேர்ந்து கலகலப்பூட்டுகிறார்கள். பேய்களிடம் மாட்டிக் கொண்டு அவதியும் படுகிறார்கள். அத்தனை பேரின் நடிப்புப் பங்களிப்பும் நிறைவு.
ரித்விகா, பீச்சாங்கை’ கார்த்திக், ரித்விகா காதல் ஜோடிகளாக இருந்து மணவாழ்வில் இணைந்து பரிதாப முடிவை சந்திப்பது கலங்க வைக்கிறது.
முனீஷ்காந்த் அலட்டலான வில்லத்தனம் காட்ட அவரது மனைவியாக வருகிற ஜாங்கிரி மதுமிதா கிளைமாக்ஸில் கவனிக்க வைக்கிறார்.
தியேட்டருக்குள் வந்து 25 வருடங்களாக வெளியில் போக முடியாத ஜார்ஜ் மரியானின் நடிப்பு கச்சிதம்.
கெளசிக் கிரிஸின் பின்னணி இசை திகில் கதைக்களத்தின் தேவையை முடிந்தவரை நிறைவேற்ற, ஒளிப்பதிவில் நிறைவான பங்களிப்பை தந்திருக்கிறார் ஜோஸ்வா ஜே.பெரஷ்.
கதையில் பெரிதாய் புதுமை இல்லாவிட்டாலும் கதை நிகழ்விடமும் எளிமையான பட்ஜெட்டில் எளிமையான நேர்த்தியான உருவாக்கமும், காமெடி கலாட்டாக்களும் படத்தின் பலம்.