அகிலம் உள்ளவரை காதல் தீராது; காதல் படங்கள் வராமல் போகாது. இப்போதைய வரவு ஆதிராஜன் இயக்கத்தில் ‘நினைவெல்லாம் நீயடா.’
பள்ளிப் பருவத்தில் தான் காதலித்த, தன்னைக் காதலித்த பெண்ணை 15 வருடங்கள் கழித்து சந்திக்கிறான் கதையின் நாயகன். அந்த 15 வருட காலத்தில் இருவரது வாழ்க்கையையும் சிலபல சம்பவங்கள் புரட்டிப் போட்டுள்ளன. அவை என்னென்ன என்பதே கதை.
அந்த கதை, அந்த காதலர்கள் மண வாழ்க்கையில் இணைவார்களா இல்லையா என்ற கேள்விக்கு பதில் சொல்லும் விதத்தில் நகராமல், வேறோரு பாதையில் பயணிப்பது சற்றே வித்தியாசம்.
கதையின் நாயகன் பிரஜன் காதலியைப் பிரிந்த ஏக்கம், மனைவியாக வந்து சேர்ந்தவளுடன் வாழ முடியாத மனநிலை, பல ஆண்டுகள் கழித்து காதலியை சந்தித்தபின் எழுகிற இனம்புரியாத உற்சாகம் என அனைத்தையும் அளவோடு தன் நடிப்பில் தந்திருக்க,
பிரஜனின் இளவயது காதலியாக வருகிற யுவலெஷ்மியின் அழகும் இயல்பான நடிப்பும் ஈர்க்கிறது.
மனிஷா யாதவ், முறைப் பையனான பிரஜனை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்துகொண்டு மனக் காயங்களுடன் வாழ்நாளைக் கழித்து பரிதாபத்தை அள்ளுகிறார்.
படு சீரியஸான கதையில் மனோபாலா வந்துபோகிற காட்சிகள் கொஞ்சமாய் சிரிக்க வைக்கிறது.
நாயகனின் நண்பனாக வருகிற ரெடின் கிங்ஸ்லிக்கு இன்னும் கொஞ்சம் கலகலப்பூட்டும்படி சீன்களை சித்தரித்திருக்கலாம்.
பிரஜனின் பள்ளிப் பருவ கதாபாத்திரத்தில் வருகிற இளைஞன் ரோஹித், சினாமிகா, ஸ்ரீபிரியங்கா, மதுமிதா, வழக்கு எண் முத்துராமன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அவரவர் பங்களிப்பை சரியாய் செய்திருக்கிறார்கள்.
உணர்வுபூர்வமான காட்சிகளை தன் இசையால் மெருகேற்றியதோடு, எந்தவித அதிர்வையும் தராமல் கடந்தோடும் காட்சிகளையும் ஓரளவு தாங்கிப் பிடித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. பாடல்கள் இதம் தருகின்றன. (இசைஞானி இசையமைத்த 1417-வது படமாம் இது.)
ஒளிப்பதிவில் குறையில்லை.
எனோதானோ திரைக்கதையால் ‘நினைவெல்லாம் நீயடா’, ‘வெறும் காற்றடைத்த பையடா’ என்ற உணர்வையே தருகிறது!