திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்குனு வந்துச்சாம் யோகம்’ என்பதுபோல், தாழ்ந்த சாதியில் பிறந்து ஊர்ப் பெரிய மனிதர் வீட்டில் அடிமையாக வேலை செய்து வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கும் அம்பேத்குமாருக்கு ஊராட்சி மன்றத் தலைவராகும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வாய்ப்பை வைத்துக் கொண்டு அவர் எப்படியெல்லாம் நொந்துபோகிறார் என்பதுதான் ‘நந்தன்’ படத்தின் கதை. இந்த படம் மூலம் இந்த 2024 காலகட்டத்திலும் தாழ்ந்த சாதி மக்களுக்கு, மக்களின் பிரதிநிதியாக தகுதி உயர்பவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை ஆதாரத்துடன் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார் இயக்குநர் இரா சரவணன்.
வெற்றிலைப் பாக்கை மென்று, அந்த எச்சில் அணிந்திருக்கும் அழுக்கேறிய பனியனில் வழிந்தோடும்படி இதுவரை காணாத சசிகுமார். எஜமான விசுவாசம் தவிர எதைப் பற்றியும் யோசிக்காத 100 சதவிகித அடிமையாய் ஊர்ப் பிரசிடெண்ட் வீட்டில் வேலை செய்வதாகட்டும், வலுக்கட்டாயமாக தனக்கு வழங்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை வைத்து மக்களுக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாத நிலையில் மனம் உடைவதாகட்டும், தயக்கம் பயம் என எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு ஒட்டுமொத்த ஊரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தன் முதலாளியை எதிர்த்து நிற்பதாகட்டும் நடிப்பில் காட்டியிருக்கும் வெவ்வேறு உடல்மொழி அசத்துகிறது.
ஆதிக்கசாதி மனப்பான்மை, அதிகாரத் திமிர், பணபலம் என எல்லாவற்றின் கலவையாக மனிதாபிமானமில்லா மனிதராக மிரட்டலான நடிப்பைத் தந்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.
தன் கணவனை அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டவனாக கம்பீரமாக பார்த்துவிட மாட்டோமா என ஏங்கித் தவித்து, அப்படியொரு வாய்ப்பு அமையாமல் ஏமாற்றத்தைச் சந்தித்து கலங்கி நிற்பவராக கவனிக்க வைக்கிறது சசிகுமாரின் மனைவியாக வருகிற ஸ்ருதி பெரியசாமியின் நடிப்பு.
வில்லனின் அல்லக்கை எப்படியெல்லாம் செயல்படுவார்களோ அவர்களின் நகலாக நடமாடியிருக்கிறார் கட்டெறும்பு ஸ்டாலின்.
வருவது ஒன்றிரண்டு காட்சிகள்தான் என்றாலும், எவருடைய உருட்டல் மிரட்டலுக்கும் அடிபணியாத அரசு அதிகாரியாக, சசிகுமாருக்கு தனித் தொகுதி பற்றி பாடம் எடுக்கும் சமுத்திரகனியின் கதாபாத்திரம் கவனம் பெறுகிறது. மற்றவர்களும் கதாபாத்திரங்களின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
பின்னணி இசையில் பெரிதாய் கவராத ஜிப்ரான் வைபோதா, ‘எக்கி எக்கி பாக்குற’ பாடலில் கிறங்கடிக்கிறார். ஒளிப்பதிவு கச்சிதம்.
2024-ல் ஒரு கிராமத்தில் கீழ் சாதி மக்களுக்கு கொடுமைகள் நடக்கிறது. அந்த சம்பவங்களில் ஒன்றுகூட மீடியாவின் கவனத்தை எட்டவில்லை; போலீஸ் என ஒருவர் கூட எட்டிப் பார்க்கவில்லை என்பதையெல்லாம் ஏற்க முடியவில்லை. இப்படி படத்தில் குறிப்பிடத்தக்க குறைகள் இருந்தாலும்,
சாதிய ஏற்றத்தாழ்வால் நடக்கும் கொடூரங்களை, ரத்த வெறியாட்டங்களை விதவிதமாக காட்சிப்படுத்தும் படைப்புகளில் வரிசையில், மக்களுக்கு சேவையாற்றுவதற்காக தேர்வாகிற பிரதிநிதிகள் சந்திக்கிற பிரச்சனைகளை, அவர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதிகளை எடுத்துச் சொன்னவிதத்தில் நந்தனின் கதைக்களம் தமிழ் சினிமாவின் தனித்துவமாகியிருக்கிறது!
Rating 3 / 5