உலகம் எவ்வளவோ முன்னேறி விட்டது. ஆனாலும் இன்றுவரை நம்மூர் பெண்கள் சாதிப் பாகுபாட்டாலும் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற தவறான சில கட்டமைப்புகளாலும், பழமையில் ஊறிய மனிதர்களாலும் பாதிக்கப்படுவது தொடரவே செய்கிறது.
படைப்பாளிகள் அந்த வேதனையை, சினிமா உள்ளிட்ட கலைப் படைப்புகளில் அவரவர் அனுபவத்தின் நீள அகலத்தின் அடிப்படையில் பதிவு செய்து கொண்டேயிருக்கிறார்கள். அந்த வரிசையில் பொழிக்கரையான் என்பவர் தனக்குத் தெரிந்த உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகியிருக்கிற படம் இது.
கிருஷ்ணம்மா சாதியிலும் படிப்பிலும் பின்தங்கியிருக்கிறாள். அதனால் மரியாதை குறைவாக நடத்தப்படுகிறாள். பின்னர் சில முயற்சிகளால் படிப்பில் முதல் மாணவியாகி ஆச்சரியப்படுத்துகிறாள். ஆனாலும் மணவாழ்க்கை அவளை முன்னேற விடாமல் தடுத்துவிட, அந்த வாழ்க்கையில் மலடி என்ற அவப்பெயர் அவளைத் துரத்துகிறது. கணவனின் கொடுமைக்கும் ஆளாகிறாள். நிலைமை மோசமானதும் மண வாழ்க்கையிலிருந்து விலகும் அவள், ஒரு கட்டத்தில் தான் மலடி அல்ல என்பதை நிரூபிக்கிறாள். அது எப்படி சாத்தியமானது, அதனால் அவள் என்னவெல்லாம் கஷ்ட நஷ்டங்களைச் சந்திக்கிறாள் என்பதை கதையின் மீதி.
அவமானம், பெருமிதம், மன உளைச்சல், தன்னம்பிக்கை என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய வலுவான கிருஷ்ணம்மா பாத்திரத்தை சுமந்து, அதற்குத் தகுந்த நடிப்பைத் தந்திருக்கிறார் மேக்னா.
படிப்பில் மக்காக இருக்கும் முறைப் பெண்ணுக்கு பாடம் சொல்லித் தந்து, ஊரே வியந்து பார்க்கிற அளவுக்கு முன்னேற்றிவிடுகிற தாய்மாமன் பொழிக்கரையான் இயல்பான நடிப்பால் கவர்ந்தாலும், அதே முறைப்பெண் களங்கத்துடன் பஞ்சாயத்தில் நிற்கும்போது அதில் தனக்கு சம்பந்தமிருந்தும் கண்டுகொள்ளாமல் ஒதுங்குவதை எப்படி ஏற்பதென்று புரியவில்லை.
மேக்னாவின் கணவராக வருகிற ராஜதுரை அன்பான கணவனாகவும், கொடுமைக்கார புருசனாகவும் இருவேறு பரிமாணங்களில் வெளிப்பட, நாயகன், நாயகியின் அம்மாக்கள் பதறித் துடித்து கலங்கித் தவிப்பதை சரியாக செய்திருக்கிறார்கள். அக்கம் பக்கம், உற்றார் உறவினர், பஞ்சாயத்து நாட்டாமைகள் என படத்தில் நிறைய பேருக்கு வந்துபோகிற வாய்ப்பு.
‘கருவறை தெய்வமாக ஆசைப்பட்டேன் நானே…’, ‘இதுதான் உறவா, இதுக்குத்தான் இரவா’ என கடந்துபோகும் பாடல்களின் இனிமையும் ‘விட்டுக் கொடுப்பதினால் கெட்டுப் போவதில்லை…’ பாடலில் இருக்கும் அதிர்வும் இசையமைப்பாளர் என கேட்க வைக்கிறது.
கதை நாயகன் காதலைச் சொல்ல தைரியமற்றவன், ஒரு பெண் தாய்மையடைய காரணமாக இருந்தும் அதை ஊர் உலகம் அறிய ஒத்துக் கொள்ளும் துணிச்சலற்றவன், இன்னொரு நாயகன் பெண்ணின் மன உணர்வுக்கு மதிப்பளிக்காதவன் என கதையின் போக்கை அமைத்து ஆண்களின் தவறான பக்கத்தை காட்சிப்படுத்தியுள்ள இயக்குநர் பொழிக்கரையான்,
ஒரு பெண் நன்றாக படித்தாலும் சூழ்நிலை நெருக்கடி அவளை எப்படி முன்னேற விடாமல் தடுக்கிறது என்பதையும், ஆண் மீது குறையிருந்தாலும் அதற்கும் சேர்த்து பெண்ணே மலடிப் பட்டம் சுமக்க வேண்டியிருப்பதையும் நேர்த்தியாக பதிவு செய்து சமூக அவலங்களை அக்கறையுடன் கண்டித்திருக்கிறார். கண்டிப்பாக பாராட்டலாம் அந்த அக்கறையை!
நானும் ஒரு அழகி – பாவப்பட்ட பிறவி!