என்.பி.இஸ்மாயில் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஷிண்டே கதாநாயகனாக நடிக்க, சம்யுக்தா வின்யா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிக்ஸிங் காதல்.’
ஃபிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ ஐயப்பா மூவிஸ் நிறுவனங்கள் சார்பில் பொள்ளாச்சி எஸ்.மகாலிங்கம், டி.கண்ணன் மற்றும் ஆயிஷா அக்மல் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் ஸ்ரேயா பாவ்னா, பிரியங்கா, திவ்யா, அம்பானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தில் சென்னையில் நடந்தது. பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட ஏராளமான திரைக்கலைஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
நிகழ்வில் பேசிய இயக்குநர் என்.பி.இஸ்மாயில், “இந்த படத்தில் நடித்த நடிகைகள் அனைவரும் புதியவர்கள் என்று நினைக்க வேண்டாம், அவர்கள் அனைவரும் கன்னடத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்கள், தமிழில்தான் அவ்ர்கள் புதியவர்கள். படத்தை தயாரித்த கண்ணன் மற்றும் மகாலிங்கம் இவருக்கும் எதுவும் தெரியாது. நான் கேட்டதை எல்லாம் கொடுத்தார்கள், என் மீது நம்பிக்கை வைத்து செய்தார்கள். சினிமா எப்போதும் நன்றாக தான் இருக்கிறது. நாம் சரியான பட்ஜெட்டில், சரியான நேரத்தில் ஒரு படத்தை முடித்தால் நமக்கு நிச்சயம் லாபம் கொடுக்கும். என்னுடைய படங்கள் அனைத்தும் அப்படித்தான் இருக்கும், அதனால் தான் தொடர்ந்து படம் பண்ணிக் கொண்டு இருக்கிறேன். நம்மால் எவ்வளவு முடிமோ அதற்கு ஏற்றவாறு படம் பண்ண வேண்டும், அதை விட்டு விட்டு நம் தகுதிக்கு மேலான பட்ஜெட்டில் படம் பண்ணால் தான் நஷ்டம் ஏற்படுகிறது.
மாதம் ஒரு கோடி கொடுப்பதாக சொல்லி சினிமாவை விட்டுவிட வேண்டும் என்று சொன்னால் நிச்சயம் நான் செய்ய மாட்டேன். சினிமாவை உயிராக நேசிப்பவர்களை சினிமா ஒருபோதும் கைவிடாது, என்பது தான் என் கருத்து.
என் படத்தின் கதாநாயகி சூப்பர் மாடல், ஆனால் எந்தவித பந்தாவும் இல்லாமல் நடித்தார். அனைவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்கள். எல்லாருமே கூட்டு முயற்சியாக இந்த படத்தை முடித்து உங்கள் முன்பு வைத்துவிட்டோம். இதை மக்களிடம் பறிமாறுபவர்கள் மீடியா நண்பர்கள் தான். அவர்கள் எனக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள், இந்த படத்திற்கும் அதை எதிர்பார்க்கிறேன். இந்த படத்தை கன்னடத்திலும் பண்ணியிருக்கோம். எனவே, இந்த படத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு” என்றார்.
பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, “மிக்ஸிங் காதல் படத்தை பார்க்கும் போதே அதில் ரசிகர்களுக்கான அனைத்து விசயங்களும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இஸ்மாயில் எடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்.
நடிகை சம்யுக்தா வின்யா பேசுகையில், “நான் கன்னட நடிகை, 15 கன்னட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். அதில் 8 படங்கள் வெளியாகி விட்டது. மாடலாக என் வாழ்க்கையை தொடங்கினேன், இன்று சூப்பர் மாடலாக முன்னேறியிருக்கிறேன். 75-க்கும் மேற்பட்ட ஃபேஷன் ஷோக்களில் பணியாற்றியிருக்கிறேன். இது என்னுடைய முதல் தமிழ்ப் படம். என்னை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய இஸ்மாயில் சாருக்கு நன்றி” என்றார்.
தயாரிப்பாளர் டி.கண்ணன், தயாரிப்பாளர் பொள்ளாச்சி மகாலிங்கம், இசையமைப்பாளர் கோனேஸ்வரன், இசையமைப்பாளர் ராஜேஷ் மோகன், நடிகை பிரியங்கா, இசையமைப்பாளர் தீனா, ஒளிப்பதிவாளர் சாதிக் கபீர், நடிகை ஸ்ரேயா பாவ்னா, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், நடிகர் அம்பானி சங்கர், மூத்த பத்திரிகையாளர் உமாபதி, தயாரிப்பாளரும் பி.ஆர்.ஓ சங்க தலைவருமான விஜயமுரளி, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் செளந்தர பாண்டியன், இயக்குநர் ரஷீத், நடிகை திவ்யா, நடிகர் ஷிண்டோ, தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ரிஷி ராஜ், நடன இயக்குநர் டயானா, பின்னணி பாடகி வினிதா உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.