தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குநர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகியிருக்கிறார் சம்யுக்தா விஜயன். அவர் இயக்கி, நடித்துள்ள ‘நீல நிறச் சூரியன்’ வரும் அக்டோபர் 4-ம் தேதி வெளியாகிறது.
படத்தில் சம்யுக்தா விஜயனோடு கீதா கைலாசம், கஜராஜ், மஷாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஸ்டீவ் பெஞ்சமின் இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகிய மூன்று பணிகளைச் செய்திருக்கிறார்.
இந்த படத்தை சிறப்புக் காட்சிகளில் பார்த்த திரைப் பிரபலங்கள் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் உலக திரைப்பட விழாக்கள் பலவற்றில் பங்கு பெற்று பாராட்டுக்களைக் குவித்துள்ளது.
ஃபர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன் சார்பில் மாலா மணியன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். Xforia Igene நிறுவனம் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது “ஒரு ஆண் பெண்ணாக மாற விரும்புவது குறித்து மட்டுமில்லாமல், நம் சமுதாயம் எப்படி அவர்களை பார்க்கிறது, எப்படி அதை கடந்து அவர்கள் சாதிக்கிறார்கள் என்பதை எந்தவிதமான நாடகத்தன்மையும் இல்லாமல் கொடுக்க விரும்பினேன். அதை இந்த படத்தில் செய்திருக்கிறேன்” என்றார்.