‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘நினைவெல்லாம் நீயடா.’
இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள 1417-வது படம் இது. இந்த படத்தை ‘லேகா தியேட்டர்ஸ்’ ராயல் பாபு தயாரித்துள்ளார்.
பிரஜின் ஹீரோவாக நடிக்க, மனீஷா யாதவ் ஹீரோயினாக நடிக்கிறார். அப்பா’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்த யுவலட்சுமி இந்த படத்தில் இளம் நாயகியாக அறிமுகமாகிறார். சினாமிகா இன்னொரு நாயகியாக அறிமுகமாகிறார். இளம் நாயகனாக ரோஹித் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மனோபாலா, மதுமிதா, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முத்துராமன், பி.எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் தயாரிப்பாளர்கள் கே.ஆர், கே.ராஜன், பி.எல்.தேனப்பன், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, கவிஞர் சினேகன், நடிகை கோமல் சர்மா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் ஆதிராஜன் பேசும்போது, “இந்த படத்தில் முதன்முறையாக இளையராஜா சாருடன் பணியாற்றியுள்ளேன். அவரை அணுகுவதே கடினம், அவருடன் எளிதாக பணியாற்ற முடியாது என்று சொல்வார்கள். ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றியபோது மிகவும் சவுகரியமாக உணரும்படி எனக்கு இசையமைத்துக் கொடுத்தார். ஐந்து பாடல்களும் அற்புதமான பாடல்கள். யுவன் சங்கர் ராஜாவும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
மதுரையில் என்னுடைய நண்பரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இந்த காதல் கதையை உருவாக்கியுள்ளேன். இதில் 70 சதவீதம் உண்மை மற்றும் 30 சதவீதம் கற்பனை கலந்து கொடுத்திருக்கிறேன். எல்லோரும் பள்ளி பருவத்தைத் தாண்டி தான் வந்திருப்பார்கள். மண்ணுக்குள் போகும் வரை யாராலும் மறக்க முடியாத ஒரு விஷயம் முதல் காதல். அதை வைத்து தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன்” என்றார்.
நாயகன் பிரஜின் பேசும்போது, “முதல் காதல், முதல் முத்தம் என எல்லாமே ஞாபகம் இருக்கும். வரும் பிப்ரவரி 14 வந்தால் எங்களது காதலுக்கு பதினாறு வருடம். எனக்கு இரண்டு குழந்தைகள் (ட்வின்ஸ்) உள்ளனர். என் அம்மா அப்பாவைத் தாண்டி இந்த இடத்திற்கு நான் வர மிகவும் ஆதரவாக இருந்தவர் என் மனைவி சாண்ட்ரா. இந்தப் படத்தில் இயக்குநர் ஆதிராஜன் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாகப் பார்த்துப் பார்த்து செதுக்கியுள்ளார். முதல்முறையாக இந்த படத்தின் பூஜையின் போது தான் நான் இளையராஜா சாரை பார்த்தேன். அவரைப் பார்த்த போது பேச்சே வரவில்லை. எப்போதும் காதல் தோல்வி அடைந்தது இல்லை.. அதே போல காதல் படமும் தோல்வி அடையாது” என்று கூறினார்.
நாயகி யுவலட்சுமி, “இசைஞானியின் இசையில் நான் நடிக்கும் மூன்றாவது படம் இது. அதை பெருமைக்குரிய விஷயமாக நினைக்கிறேன். பள்ளிக் காதல் என்பது மறக்க முடியாத ஒரு விஷயம் தான். எல்லாருமே அதைக் கடந்து வந்திருப்போம். இதை மையப்படுத்தி ஆதிராஜன் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார். அதில் நானும் ஒரு பாகமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
நடிகை மதுமிதா பேசும்போது, “என்னுடைய பிரசவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்புவரை இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வந்தேன். இயக்குநர் ஆக்சன் என்று மைக்கில் சொல்லும்போது அந்த அதிர்வை கேட்டு என் வயிற்றில் உள்ள குழந்தை என்னை எட்டி உதைத்துக் கொண்டிருந்தான்” என்றார்.
தயாரிப்பாளர் கே ராஜன், “இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டிருக்கும்போதே படம் எப்படி இருக்கும் என்பது பற்றி சொல்லத் தேவையில்லை. படத்தில் இளம் ஜோடிகளைப் பார்க்கும்போது ‘அலைகள் ஓய்வதில்லை’ கார்த்திக், ராதாவை பார்ப்பது போல இருக்கிறது” என்றார்.