மது போதைக்கு அடிமையானவர்கள் பல விதங்களில் பாதிக்கப்படுவார்கள்; வருந்துவார்கள்; திருந்துவார்கள்; பரலோகத்துக்கு பார்சலாவதும் உண்டு. இதுதான் காலம் காலமாக போதை சம்பந்தப்பட்ட விழிப்புணர்வுப் படங்களின் டெம்ப்ளேட். இந்த படத்திலும் வருந்துவது திருந்துவது என எல்லாமும் உண்டு.
வித்தியாசமான விஷயம் அரசாங்கம் மது விலக்கு கொண்டு வந்ததால் வருந்துகிறார்கள், மது கிடைக்காத நிலையில் திருந்துகிறார்கள். அம்புட்டுதேன்…
நாயகன் ஹரிஷ் நம்மூரில், நம் தெருவில் நடமாடுகிற சராசரி இளைஞனைப் போலிருக்கிறார். தான் எந்த நேரமும் குடித்து உடம்பைக் கெடுத்துக் கொள்வதோடு, தன்னைப் போன்ற குடிகாரர்களுக்காக மதுப்பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம் ந்டத்தி கூத்தும் கும்மாளமுமாக பொழுதைக் கழிக்கிறார். மது விலக்கு நடைமுறைக்கு வந்தபின், கள்ளச் சாராயம் காய்ச்சும் கடமையிலும் ஈடுபடுகிறார். நடிப்பு இயல்பாக இருக்கிறது.
ஹரிஷை நேசித்து, அவரது குடிப்பழக்கத்தை வெறுப்பவராக தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலையை சரியாக செய்திருக்கிறார் தனலெஷ்மி.
குடிகாரர்களின் மனநிலை எத்தனை கேவலமானது என்பதற்கு சான்றாக இருக்கிறது மனைவி இறந்தது கூட தெரியாமல் குடித்துக் கொண்டிருப்பவரின் கேரக்டர்.
சின்னச் சின்ன காமெடி கலாட்டாக்களோடு பயணிக்கும் கதையில் கள்ளச் சாராயம் காய்ச்ச வருகிற மொட்டை ராஜேந்திரன் கொஞ்சம் அதிகமாக சிரிப்பூட்டுகிறார்.
இனியன் ஜே.ஹாரிஸின் ஒளிப்பதிவு, சகிஷ்னா சேவியரின் பின்னணி இசை கச்சிதம்.
அரசாங்கம் மதுவிலக்கு கொண்டு வந்தால் ஊர் உலகத்தில் என்னென்ன விளைவுகள் உருவாகும், மாற்றங்கள் ஏற்படும் என்பதை கற்பனை காட்சிகளாக தொகுத்திருக்கும் இயக்குநர் பிரபுராம் சி, பாடம் நடத்துவது போலில்லாமல் போகிற போக்கில் மதுவின் தீமைகளை எடுத்துக் காட்டி ‘குடி’மகன்களை எச்சரிக்கிறார்.
Rating 2.5 / 5 

