‘தி லயன் கிங்’கின் இரண்டாம் பாகமாக ‘காட்டை ஆளும் தகுதி யாருக்கு இருக்கிறது?’ என்பதை மையப்படுத்தி பேரி ஜென்கின்ஸ் இயக்கியிருக்கும் படைப்பு.
தன் பெற்றோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் காட்டில் பெரியளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட, அதில் அடித்துச் செல்லப்படும் இளவயது முபாஸா வேறொரு காட்டுக்கு போய்ச் சேர்கிறான். அந்த காட்டின் தலைவன் ஒபாஸி முபாஸாவை வெறுக்க, ஓபாஸியின் மனைவியும் ஓபாஸியின் மகன் டாக்காவும் முபாஸா மீது பாசம் காட்டுகிறார்கள். டாக்கா, முபாஸாவின் உயிருக்கு உயிரான நண்பனாகிறான். அப்படியான சூழலில் முபாஸா உற்சாகமாக வளர்ந்து வாலிபப் பருவத்துக்கு வருகிறான். அந்த காலகட்டத்தில் முபாஸா வெண் சிங்கக் கூட்டத்தின் தலைவன் கிரோஸுக்கு பகையாளியாகிறான்.
கிரோஸ், முபாஸாவை கொல்லும் நோக்கத்துடன் தன் கூட்டத்துடன் படையெடுத்து வர, முபாஸா அங்கிருந்து தப்பி ஓடி வேறொரு காட்டுக்கு போய்ச் சேர, கிரோஸ் அங்கும் முபாஸாவை துரத்தி வர கதைக்களம் பரபரப்பாகிறது.
கிரோஸுக்கு முபாஸா பகையாளியானது ஏன்? முபாஸாவால் கிரோஸிடமிருந்து தப்பிக்க முடிந்ததா? என்பதெல்லாம் திரைக்கதையின் விறுவிறுப்பான எபிசோடுகள்…
முபாஸாவின் இளவயது அழகும் வாலிபப் பருவ கம்பீரமும் உணர்வுகளை வெளிப்படுத்தும் பொருத்தமான முகபாவமும் மனதைக் கவர, அர்ஜுன்தாஸின் குரல் முபாஸாவுக்கு கூடுதல் கம்பீரத்தை தந்திருக்கிறது.
வில்லனாக வேகமெடுத்து திரிகிற வெண் சிங்கம் கிரோஸுக்கு நாசர்மிரட்டலான குரல் தந்திருக்க, டாக்காவுக்கு குரல் தந்திருக்கிறார் அசோக் செல்வன்.
ஜாலியாய் திரியும் டிமோன், பும்பாவுக்கு ரோபோஷங்கரும் சிங்கம்புலியும் டப்பிங் பங்களிப்பு வழங்கியிருப்பது கலகலப்புக்கு உதவியிருக்கிறது. ரஃபீக்கி என்ற பெயரில் வலம்வருகிற சிம்பன்ஸி விடிவி கணேஷ் குரலில் கவனம் பெறுகிறது.
அடர்ந்த காடுகள், பனிக் கட்டிகளால் நிரம்பிய பகுதிகள் என கதை நிகழ்விடங்கள் அழகாகவும் பிரமாண்டமாகவும் உருவாக்கப்பட்டிருக்க, பின்னணி இசை திரைக்கதைக்கு சரியாக பொருந்தியிருக்கிறது. பாடல்கள் பரவாயில்லை ரகம்.
கடந்த பாகத்தில் இருந்த அளவு காமெடி கலாட்டாக்கள் இல்லையென்றாலும் சுவாரஸ்யமான திரைக்கதை குழந்தைகளின் மனதை குதூகலமாக்குவது கேரண்டி!