பள்ளிப் பருவத்திலிருந்து விடைபெற்று, அவரவர் திசையில் பறந்து திரிந்தவர்கள் பக்குவப்பட்ட வயதில் சந்திக்கிற ரீ யூனியன் கதை.
கதையின் நாயகன் பள்ளிப் பருவத்தில் சக மாணவியைக் காதலித்து, காதலை அவளிடம் சொல்லாமல் பிரிகிறான். பத்து வருடங்கள் கழித்து தன்னுடன் படித்த மாணவ மாணவிகளோடு சேர்த்து அவளைச் சந்திக்கிறான். அந்த சந்திப்பு நீதிமன்ற உத்தரவால் நடக்கிறது.
கடந்துபோன பத்து வருடங்களில் நடந்ததை, பத்தாண்டு கழிந்த ரீ யூனியன் சந்திப்பில் நடப்பதை முடிந்தவரை சுவாரஸ்யத்துடன் திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர் ராக்கோ யோகேந்திரன். அந்த ரீ யூனியன் ஏன் நீதி மன்றத்தால் நடக்கிறது என்பது கதையிலுள்ள சிறப்பம்சம்!
பள்ளிப் பருவம், பத்தாண்டு கழிந்த வாலிபப் பருவம் இரண்டையும் வேறுபடுத்திக்காட்ட மீசை செழிக்கத் தொடங்கிய காலகட்டம், தாடி அடர்ந்த காலகட்டம் என சின்னச் சின்ன தோற்ற வித்தியாசங்களோடு வருகிறார் கதைநாயகன் ரக்சன். உணர்வுகளை சரியாக வெளிப்படுத்துவதில் இன்னும் தேற வேண்டும் என்றாலும் கதைக்களத்துக்கு போதுமான நடிப்பைத் தந்திருப்பதில் குறையில்லை.
நாயகி மெலினா டயட் கண்ட்ரோலில் கெடுபிடி போலிருக்கிறது. அவருக்கு இன்னும் கொஞ்சம் சதை பிடித்திருக்கலாம் என தோன்றுகிற நம் மனதுக்கு, அவரது இன்னொரு அழகான சிரிப்பும் அளவான நடிப்பும் பிடிக்கும்.
பி இ டி மாஸ்டராக வந்து கணக்கு டீச்சரிடம் அசடு வழிகிற தருணங்களை ரசிக்க வைத்து, பின் தேர்ந்த நடிப்பால் நெகிழ வைக்கிறார் முனீஸ்காந்த்.
உடற்பருமனால் உருவ கேலிக்கு ஆளாகி பின் கேலி செய்தவர்களை திறமையால் வியக்க வைக்கிற ‘பிராங்க்ஸ்டர்’ ராகுல் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்கள் முடிந்தவரை நேர்த்தியான நடிப்பைத் தர, காட்சிகளை தன் பின்னணி இசையால் மெருகேற்ற முயற்சித்திருக்கிறார் சச்சின் வாரியர்.
பாராட்டும்படியான உழைப்பைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபி துரைசாமி.
’96’ படத்தில் பார்த்து ரசித்ததை போன்ற கதைக்களத்தில்,
எளிமையாயான நடிகர் நடிகைகளை, பின்னாளில் பெரியளவில் கவனம் ஈர்க்கப்போகிற தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்துக் கொண்டு நெஞ்சம் மறக்காத பள்ளிப் பருவ நாட்களை அசைபோட வைத்ததில் இயக்குநர் ராக்கோ யோகேந்திரன் பாராட்டுக்குரியவராகிறார். அவரது அடுத்தடுத்த படங்கள் தாறுமாறாக ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையை தருகிறார்!