புதுமுகங்களின் பங்களிப்பில், சிலை கடத்தலை மையமாக கொண்டு உருவாகி, ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள படம்.
பல கோடி மதிப்புமிக்க பழங்காலச் சிலையொன்று மகா திருடன், மெகா திருடன், லோக்கல் திருடன், காவல்துறையிலேயே இருக்கிற கறுப்பாடு என சிலருக்கு கைமாற, இறுதியில் சிலை யாருக்கு சொந்தமாகிறது என்பதே ‘மால்’
போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிற கஜராஜ், தன் சரகத்துக்குட்பட்ட திருடர்கள் திருடுவதை அபகரிப்பது, திடுதிப்பென தன் கண்ணில் தென்பட்ட சிலையை விற்று பணமாக்கத் துடிப்பது, தன் மிரட்டலுக்கு பயந்தவர்கள் கையில் துப்பாக்கியைக் கண்டதும் தவித்துப் போவது என இயல்பான நடிப்பால் கவர்கிறார்.
சிலை கடத்தல் விவகாரத்தின் முக்கியப் புள்ளியாக வருகிற சாய் கார்த்தியின் வில்லத்தனம் அசத்துகிறது. அவருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிற கெளரிநந்தாவின் வளமையான செழுமையான உடலமைப்புக்கு இளசிலிருந்து பெருசு வரை அத்தனைப் பேரையும் சூடேற்றும் சக்தியிருப்பதை மறுக்க முடியாது.
தன் நண்பனுடன் சேர்ந்து செயின் அறுப்பு மாதிரியான குற்றங்களில் ஈடுபடுகிற தினேஷ் குமரனின் அட போட வைக்கும் நடிப்பும் அவரது பிளாக் காமெடியும் அசத்துகிறது. ஸ்கூல் ஸ்டூடண்ட் போலிருக்கும் அந்த இளைஞன் தான் இந்த படத்தின் இயக்குநர் என்பதும், அவருக்கு இது முதல் படம் என்பதும், படத்தின் உருவாக்கம் பல படங்களை இயக்கியவரின் படைப்பு போலிருப்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.
ஊடகப் பணியாளர்களாக வருகிற வி ஜெ பப்பு – ஜெய் கதைக்கு தொடர்பில்லாதது போல் பயணித்தாலும் கடைசிக் காட்சியில் கெத்தாக கை கொடுத்திருக்கிறார்கள். இருவருக்குமிடையில் மலரும் காதலில் இன்னும் கொஞ்சம் உணர்வோட்டம் கூட்டியிருக்கலாம்.
சிலைகள் ஒரு தரப்பிலிருந்து இன்னொரு தரப்புக்கு கை மாறும் காட்சிகளில் அளவான தெளிவான பரபரப்பைத் தந்திருக்கிறது திரைக்கதை.
பத்மயன் சிவானந்தம் பின்னணி இசையில் திறமை காட்டியிருக்கிறார். ஒளிப்பதிவையும் படத்தொகுப்பையும் சேர்த்துக் கவனித்துள்ள சிவராஜ் ஆரின் உழைப்பு நேர்த்தி.
பிரமாண்ட பட்ஜெட்டில், பெரிய பெரிய இயக்குநர்கள், நடிகர் நடிகைகள், பிரபலமான தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்களிக்கும் படங்களே ரசிகனை படாதபாடு படுத்தும் காலகட்டத்தில்,
கதை, திரைக்கதை, கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத் தொகுப்பு என எல்லாவற்றிலும் மால் தரத்தில் பலமடங்கு மேல்!