கொரோனா பாதிக்கப்பட்ட 5394 நோயாளிகளை சித்த மருத்துவத்தின் மூலம் மீட்டெடுத்த சித்த மருத்துவர் வீரபாபு எழுதி, இயக்கி, தயாரித்து, பின்னணி இசையமைத்து, நடித்துள்ள படம் ‘முடக்கறுத்தான்.’குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் குற்றத்தை கருவாக கொண்டுள்ள இந்த படத்தி வீரபாபு, மஹானா, சமுத்திரக்கனி, சூப்பர் சுப்பராயன், மயில்சாமி, சாம்ஸ், பாவா லட்சுமணன், ‘காதல்’ சுகுமார், முத்துக்காளை, வைஷ்ணவி, பேபி ஷாலினி ரமேஷ், தயாளன் ரமேஷ், இந்திரஜித் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 25-ம் தேதி சென்னையில் நடந்தது.
வீரபாபு, தமிழருவி மணியன், இயக்குநர் தங்கர் பச்சான், சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படத்தில் நடித்தவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய வீரபாபு, ‘‘குழந்தைகளை கடத்தி அவர்களை வைத்து சாலைகளில் பிச்சை எடுக்கும் கும்பலை அழித்தொழிக்க வேண்டும் என்பதை மையமாக கொண்டது இந்த படம். இதன் மூலம் சமூகத்திற்கு தேவையான முக்கியமான கருத்துகளையும் கோரிக்கைகளையும் அரசாங்கத்திற்கு வைத்துள்ளேன். அவை குழந்தைகள் சார்ந்த வேண்டுகோளாகவே இருக்கும். அடுத்த கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்குள் அதை சந்திப்பதற்கு சித்த மருத்துவ முறையிலும் நோயாளிகளுக்கான வசதிகள் அடிப்படையிலும் தயாராக இருக்க வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
சமுத்திரக்கனிபேசும்போது, ‘‘தன்னுடைய கதையின் மீது நம்பிக்கை வைத்து அவர் சொல்லத் துணிந்த சமூகக் கருத்து மிக முக்கியமானது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீதான கவனத்தை செலுத்தாமல் பணம் ஈட்டுவதில் குறியாக இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை அறியாமல் இருந்து விடுகின்றனர். அதனால் ஏற்படும் விளைவுகளை இந்த படம் விவரிக்கிறது. கொரோனா பெருந்தொற்றில் வீரபாபு பெருந்தொண்டாற்றினார். நான் தெலுங்கு படமொன்றின் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் நிலக்கரி உடல் முழுவதும் இருக்குமாறு நடித்ததால் ஏற்பட்ட ஒவ்வாமையை வீரபாபு தீர்த்து வைத்தார்” என்றார்.
தமிழறிஞரும் அரசியல்வாதியுமான தமிழருவி மணியன், ‘‘கொரோனா பெருதொற்றில் பாதிக்கப் பட்டிருந்தபோது வீரபாபு அளித்த சிகிச்சையால்தான் இப்போது உயிருடன் உள்ளேன். ஆங்கில மருத்துவத்தால் நான் நிறைய இன்னல்களை சந்தித்தேன். அதனால் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும்” என்றார்.
படக்குழு:
தயாரிப்பு: வயல் மூவிஸ்
எழுத்து, இயக்கம்: சித்த மருத்துவர் வீரபாபு
இணை இயக்கம்: மகேஷ் பெரியசாமி
இசை: சிற்பி
பாடல்கள்: பழநிபாரதி
ஒளிப்பதிவு: அருள் செல்வன்
படத்தொகுப்பு: ஆகாஷ்
ஒலிப்பதிவு: ஆண்டனி மைதீன்
சண்டைப்பயிற்சி: சூப்பர் சுப்பராயன்
நடனம்: நோபல் பால்
கலை இயக்கம்: பிரபஞ்சன்
வடிவமைப்புகள்: பிளஸ்ஸன்
மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத்