‘லவ் டுடே’ இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், உருவ கேலியை மையமாக வைத்து மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மதிமாறன்.’
படத்தில் குள்ள மனிதன் கதாபாத்திரத்தில் வெங்கட் செங்குட்டுவன் நாயகனாக நடித்துள்ளார். ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பாவா செல்லதுரை, E.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரித்துள்ள இந்த படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ள நிலையில் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் மந்திர பாண்டியன், ‘‘நான் கிராமத்திலிருந்து வந்தவன், என்னை என் உருவத்தை வைத்துத் தான் எடை போடுகிறார்கள். Don’t judge book by its cover அது தான் உண்மை ஒருவரின் திறமை அவரது உருவத்தில் இல்லை. அதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்துத் தான் இப்படம் எடுத்தேன். இந்தப்படத்தை நிஜத்திற்கு நெருக்கமாக, கமர்ஷியல் அம்சத்துடன் அனைவரும் ரசிக்கும்படி எடுத்துள்ளோம். இந்தப்படம் உங்களைத் திருப்திப்படுத்தும்” என்றார்.
நடிகை இவானா, ‘‘மூன்று வருடமாகச் செய்த படம் இது. மந்திரா அண்ணாவை நாச்சியார் டைமில் இருந்து தெரியும். அப்போது தொடங்கிய நட்பு. என் குடும்பத்திற்கும் நெருக்கமானவர். இந்தக்கதை சொன்னபோது எனக்காக எழுதியதாகச் சொன்னார். இந்தப்படம் பாடிஷேமிங் பத்தி பேசியுள்ளது. நன்றாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.
நடிகர் எம் எஸ் பாஸ்கர், ‘‘இது ஒரு நல்ல கதை. நல்ல கேரக்டர். படத்தில் அனைத்து கேரக்டர்களுமே அருமையான பாத்திரங்கள். எனக்கு இயக்குநர் மந்திரா கதை சொன்னபோதே மிகவும் பிடித்திருந்தது. உணர்வுப்பூர்வமாக மிகவும் எமோஷனலாக நிறைய இடத்தில் டயலாக் பேசினேன். என்னை மிகவும் கலங்க வைத்தது இந்தப்படம். தயாரிப்பாளர்கள் மிகச் சிறப்பாக அனைவரையும் உபசரித்தார்கள். ஹீரோ வெங்கட் செங்குட்டுவன் அவ்வளவு அற்புதமாக நடித்துள்ளார். இப்படி ஒரு அற்புதமான படத்தில் நானும் நடித்திருப்பது மகிழ்ச்சி.
உயரத்தில் என்ன இருக்கிறது. எனக்கே முடி கொட்டிய பிறகு தான் வாய்ப்புகள் வந்தது. என்னையும் கிண்டல் செய்துள்ளார்கள். உலகில் சாதனை படைத்த பலர் உருவத்தில் குறைவாக இருந்தவர்கள்தான். அதற்காக கவலையே படக்கூடாது” என்றார்.
இயக்குநர் ரத்ன சிவா, ‘‘மந்திரா என்னிடம் வேலைபார்த்தவர். ஏற்கனவே 7 வருடங்களுக்கு முன்பே ஒரு படம் எடுத்து அது நின்றுவிட்டது. பின் பாலாவிடம் உதவியாளராக வேலை பார்த்தார், இரண்டாவது படம் கிடைக்கும் போது, யாராக இருந்தாலும் கர்ஷியல் படம் தான் எடுப்பார்கள் ஆனால் இப்படி ஒரு கதைக்களத்தில் படம் செய்திருக்கும் மந்திராவிற்கு வாழ்த்துக்கள்” என்றார்.
படக்குழு:
இயக்கம் – மந்திர வீரபாண்டியன்
தயாரிப்பு – லெனின் பாபு
தயாரிப்பு நிறுவனம் – ஜிஎஸ் சினிமா இன்டர்நேஷனல்
TN திரையரங்கு வெளியீடு – பாபின்ஸ் ஸ்டுடியோஸ்
இசையமைப்பாளர் – கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு – பர்வேஸ் K
எடிட்டர் – சதீஷ் சூர்யா
கலை இயக்குனர் – V.மாயபாண்டி சண்டைக்காட்சி – சுரேஷ் குமார்
ஆடை வடிவமைப்பாளர் – கடலூர் M ரமேஷ், ஷேர் அலி N (வெங்கட் செங்குட்டுவன்) ஒப்பனை – என்.சக்திவேல்
மக்கள் தொடர்பு – யுவராஜ்.