அறிமுக நாயகன் ஜெயகாந்த் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஜே.ராஜா முகம்மது இயக்கத்தில், ஸ்ரீ ஆண்டாள் மூவிஸ் பி.வீர அமிர்தராஜ் தயாரித்துள்ள ‘முனியாண்டியின் முனி பாய்ச்சல்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் ராஜா முகம்மது பேசியபோது, ‘‘மதுரையில் என் நண்பன் ஜெயகாந்த்துடன் பாண்டி கோவிலில் அமர்ந்து அந்த காவல் தெய்வத்தின் கதைகளையும் அங்கு நடந்த அதிசய நிகழ்வுகளைப் பற்றியும் பேசும் போது, இந்த தெய்வத்தின் கதையை ஏன் நாம் திரைப்படத்தில் கொண்டு வரக்கூடாது என்ற எண்ணமும். இதைப் பற்றி யாருமே பேசியதில்லையே என்ற எண்ணமும் தோன்றியது.
எனக்குத் தெரிந்து வருடத்தின் 365 நாட்களும் கடா வெட்டி பூஜை நடக்கின்ற கோவில் முனியாண்டி கோவிலாகத்தான் இருக்கும். சிலருக்கு நம்பிக்கை இருக்கும் சிலருக்கு நம்பிக்கை இருக்காது. ஆனால் நான் நேரில் பார்த்து இருக்கிறேன். அந்த கோவிலின் பூசாரி அருள் வாக்கு சொல்லும் போது அவரின் குரல் மாறிப் போய், வேறொரு நபராகவே என் கண்களுக்குத் தெரிவார்.
நாங்கள் படம் தொடர்பான எல்லா வேலைகளுக்கும் பாண்டி கோவிலில் முதலில் உத்தரவு கேட்போம். என் நண்பனின் கண்களில் மூன்று தயாரிப்பாளரைக் காட்டியது. அதில் முதலாமானவர் தான் எங்கள் தயாரிப்பாளர் வீர அமிர்தராஜ். எங்கள் தயாரிப்பாளருக்கு குல தெய்வம் முனியாண்டி தான். அவர்கள் இப்படத்தை தயாரிப்பதற்கு மிக முக்கிய காரணமும் அதுதான். தயாரிப்பாளர் இப்படத்தைப் பணத்துக்காக தயாரிக்கவில்லை என்றாலும் அவருக்கு இப்படம் நல்ல லாபத்தையும் கொடுக்க வேண்டும்.
நாயகன் ஜெயகாந்திற்கும், இயக்குநரான எனக்கும் நல்ல எதிர்காலத்தைக் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகிறோம். அது அப்படியே நடக்கும் என்றும் நம்புகிறோம்” என்றார்.
நாயகன் ஜெயகாந்த் பேசியபோது, ‘‘இப்படம் உருவாக முதற்காரணம் பாண்டி கோவில் தான். நான் எல்லா முடிவுகளையும் பாண்டி கோவிலில் வைத்து தான் எடுப்பேன். அமாவாசை, பெளர்ணமி நாட்களில் நான் எப்போதும் பாண்டி கோவிலில் தான் இருப்பேன். என்னை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ராஜா முகம்மது வரும் போது, தயாரிப்பாளர் யார் என்று தெரிந்து கொள்ள பாண்டி கோவிலில் அழுது வேண்டினோம். முனி எங்களுக்கு தயாரிப்பாளரைக் காட்டியது. இப்படம் வெற்றி பெற வேண்டும் என்று நானும் இயக்குநரும் வேண்டி இருக்கிறோம். கண்டிப்பாக திரைப்படம் வெற்றிபெறும் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.