தமிழ் சினிமாவுக்கு திரில்லர் சப்ஜெக்டில் மற்றுமொரு வரவு.
பரபரப்பான நகரத்தில் திடீரென ஒரு நபர் எங்கிருந்தோ கிளம்பி வந்து அங்குமிங்கும் திரிகிறான். ஒரு சிலரை மூர்க்கமாக தாக்குகிறான். அதில் ஒரு சிலர் இறந்துபோக அவனை சுற்றி வளைக்கும் போலீஸாரையும் அடித்து நொறுக்கி தப்பித்து போகிறான்.
போலீஸ் உயரதிகாரி விதார்த் அவனைப் பிடிக்க சாமர்த்தியமாக திட்டம் தீட்டுகிறார். அந்த சமயத்தில் அவரது மனைவி அவனிடம் சிக்கிக் கொள்கிறார்.
அந்த கொடூரனைப் பிடித்து, தன் மனைவியைக் காப்பாற்ற விதார்த் எடுக்கும் முயற்சிகளும் அதில் அவர் சந்திக்கும் சவால்களும் அடுத்தடுத்த காட்சிகளாக கடந்துபோக… அந்த மர்ம மனிதன் யார், அவனது நோக்கம் என்ன? அவனை விதார்த் பிடித்தாரா இல்லையா? மனைவியை காப்பாற்றினாரா இல்லையா? என்பதெல்லாம்தான் படத்தின் திரைக்கதை… கொலையாளி யார் என்ற மர்மம் விடுபடும்போது எதிர்பாராத திருப்பம் காத்திருக்கிறது.
விதார்த் போலீஸ் உயரதிகாரிக்கான கம்பீரத்தை அலட்டலின்றி தன் நடிப்பில் கொண்டு வந்திருக்க, அவருக்கு மனைவியாக வருகிற ஸ்வேதா அழகாலும் பயந்த சுபாவம் கொண்டவராக இயல்பான நடிப்பாலும் கவர்கிறார். கதையின் முக்கியமான பாத்திரத்தில் வருகிற சஹானாவின் வில்லத்தனத்தில் மிதமான மிரட்டல் தெரிகிறது. சஹானாவின் அப்பாவாக பசுபதி ராஜ், கணவராக விபின், கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன் என மற்றவர்களின் நடிப்பும் கச்சிதம்.
எம் எஸ் பிரவீனின் பின்னணி இசையும், ஞான செளந்தரின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.
சைக்கோ கொலையாளியை மையமாக வைத்து விறுவிறுப்பான திரில்லர் படைப்பைக் கொடுக்க நினைத்த இயக்குநர் சாஜி சலீம், மிகச்சில காட்சிகளில் மட்டுமே அந்த விறுவிறுப்பைக் கொண்டு வந்திருக்கிறார்.
Rating 2.5/5