கொலைகாரனை நமக்கு காட்டிவிட்டு, அவன் எதற்காக கொலை செய்கிறான் என்பதையும் ஓரளவு புரியவைத்துவிட்டு, அதே விவரங்களை போலீஸ் எப்படி துப்பறிந்து கண்டுபிடிக்கிறது, கொலைகாரனை எப்படி நெருங்குகிறது என்பதை திரைக்கதையாக்குவது கிரைம் திரில்லர் படங்களின் சக்ஸஸ் ஃபார்முலா. அதே ஃபார்முலாவில் உருவான மற்றொரு படமாக ‘குற்றப் பின்னணி.’
வீடு வீடாக போய் பால் வியாபாரம் செய்வதோடு, தண்ணீர் கேனும் போடுகிற எளிய மனிதன் சூசை, ஒரு வீட்டை நன்றாக நோட்டமிட்டு சந்தர்ப்பம் பார்த்து அந்த வீட்டுப் பெண்மணியை கொலை செய்கிறான். அதே ஸ்டைலில் மற்றொரு கொலையையும் செய்து முடிக்க, போலீஸ் குற்றவாளி யார் என தேடும் பணியில் மும்முரமாகிறது. சூசை அதே போலீஸுடன் கலந்து பழகி வலம் வருகிறான். போலீஸ் அந்த எரியா ஃபைனான்ஸியர் ஒருவரை குற்றவாளியாக கருதி நெருங்கும்போது, சூசை அவரது உயிரையும் பறிக்கிறான்.
கதை இப்படி நகர, போலீஸார் கொலைகாரனான சூசையை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதை கொஞ்சமே கொஞ்சம் விறுவிறுப்பாக காண்பித்து, அவன் செய்யும் கொலைகளுக்கான காரணத்தை சொல்லி முடிக்கிறார் இயக்குநர் என்.பி.இஸ்மாயில்.
ராட்சசன்’ படத்தில் கிறிஸ்டோபராக கொடூர முகம் காட்டி மிரட்டிய சரவணன், இந்த படத்தில் கொலை செய்யும்போது அதே மாதிரியான மிரட்டலை தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார். மற்ற தருணங்களில் அப்பாவியாய் சுற்றித் திரிவதும் கவர்கிறது.
சரவணனுக்கு மனைவியாக வருகிற தீபாலியின் கவர்ச்சியான உடற்கட்டு அவர் ஏற்றிருக்கும் தகாத உறவு பாத்திரத்துக்கு பொருந்திப்போக, அவரது எளிமையான நடிப்பும் பலம் கூட்டியிருக்கிறது.
பைனான்ஸியர், ஃபைனாஸ்சியருடன் முறையற்ற உறவிலிருந்து கொலை செய்யவும் துணிகிற பெண், போலீஸார் என மற்ற அனைவரும் தேவைக்கேற்ற நடிப்பைக் கொடுத்திருக்க, கதைக்களத்தை பலமாக்கியிருக்கிறது ஜித் தந்திருக்கும் பாடலும் பின்னணி இசையும்.
கதாநாயகன் செய்யும் கொலைகளில் பெரிதாய் நியாயமில்லாமல் இருப்பதும், ஸ்கிரீன்பிளேயில் பெரிதாய் திருப்பங்களைக் காண முடியாததும் படத்தின் பலவீனம்.
குற்றப் பின்னணி – சமூகத்தின் கண்ணாடி!