ஆழமான நட்பு, அண்ணன் தங்கை பாசப் பிணைப்பு கூடவே கலகலப்பு என குதூகலம் தருகிற ‘கும்பாரி.’
படத்தின் ஹீரோவுக்கு, குற்றச் செயல்களில் ஈடுபடுவதையே தொழிலாக கொண்ட ஒரு அடிதடி ஆசாமியின் தங்கை மீது காதல். தங்கையின் காதல் கல்யாணத்தில் முடிந்துவிடக் கூடாது என அந்த அண்ணன் களமிறங்குகிறான்.
அல்லக்கை, அடியாள் என பலமாக இருக்கிற அந்த அண்ணனுடைய எதிர்ப்பைச் சமாளித்து, ஹீரோவை அவன் விரும்பிய பெண்ணுடன் சேர்த்து வைக்க ஹீரோவின் நண்பன் முயற்சிக்கிறான். அந்த முயற்சியின் பலன் என்ன என்பதே கதை…
ஹீரோவாக விஜய் விஷ்வா. பிராங் வீடியோவுக்கு தன்னை பயன்படுத்திக் கொண்ட பெண் மீது எரிச்சலாகி, பின் அவள் மீது காதலாகி ஜாலியாக சுற்றித் திரிகிறார். காதலியின் அண்ணனுக்குப் பயந்து காதலியோடு வெவ்வேறு ஊர்களுக்கு ஓடுகிறார், ஒளிகிறார். எதற்காகவும் அலட்டிக் கொள்ளாமல் எல்லாவற்றையும் இயல்பாக செய்திருக்கிறார்.
என்னைப் பார் என இழுக்கும் இளமை, அழகான முகம், அசத்தல் புன்னகை என காம்போ பேக்காக மஹானா. போதும் போதும் என பிரியம் காட்டுகிற அன்ணனைப் பிரிந்து, காதலனோடு சேரத் துடிப்பதில் சுறுசுறுப்பு காட்டியிருக்கிறார்.
பாசம் என்ற பெயரில் கிறுக்குத்தனமாக நடந்து தங்கையை கிறுகிறுக்க வைப்பதாகட்டும், வீட்டை விட்டுப் போன தங்கையை துரத்திப் பிடிக்க அங்குமிங்கும் ஓடுவதாகட்டும் ஜான் விஜய்யின் நடிப்பு கொஞ்சம் அதிகப்படிதான் என்றாலும் முடிந்தவரை சிரிக்க வைக்கிறார்.
உறவுக்காரர்களோடு குடித்துக் கூத்தடிக்கிற பருத்தி வீரன் சரவணன், அம்மன் வேடம் போட்டு தம்பியைக் குழப்பிவிடுகிற செந்தி, தோழியின் காதலன் போட்ட மாலையை கழுத்தில் சுமந்து கதையை காமெடி டிராக்கில் தள்ளிவிடுகிற ‘ஜாங்கிரி’ மதுமிதா என பலரும் அவரவர் பங்குக்கு கலகலக்க வைக்கிறார்கள்.
அடியாட்களின் தலைவனாக வருகிற சாம்ஸின் அலப்பரைகள் ரசிக்க வைக்கின்றன.
தன் கும்பாரி (கன்னியாகுமரி மீனவர்களின் பேச்சுமொழியில் கும்பாரி என்றால் நண்பன் என்று அர்த்தம்)விரும்பியதை அடைய எதையும் செய்யத் தயாராகி, செய்து முடிக்கிற நலீப் ஜியாவின் நடிப்பும் கவர்கிறது.
அந்தோணி தாசன் பாடும் ‘அவிய இவிய எல்லோரும் கேளுங்க’ பாடலில் உற்சாகம் கரைபுரள்கிறது; பாடல் வரிகளில் குமரி மக்களின் வட்டார வழக்கு பின்னிப் பிணைந்திருக்கிறது. ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி கூட்டணியின் இதமான இசையில் ‘நானும் நீயும் சேந்திடவே மனம் ஏங்குதே’ பாடம் இதயம் வருடுகிறது.
பூவாறு, திற்பரப்பு அருவி என கன்னியாகுமரியின் அழகை பிரகாசமாக படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசாத் ஆறுமுகம்.
மிகமிக எளிமையான காதல் கதையில் நட்பையும் அண்ணன் தங்கை சென்டிமென்டையும் கலந்து சிம்பிளான சிரிப்பு விருந்து படைத்திருக்கிற இயக்குநர் கெவின் ஜோசப், அடுத்தடுத்த படங்களை சிறப்பாகத் தருவார் என நம்பலாம்.