வருமானம் எளிமையாக இருக்கிற பட்சத்தில் குடும்பத்தினரிடம் அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என வாக்குறுதி கொடுப்பதெல்லாம் கூடவே கூடாது; அப்படி கொடுத்தால் அது தனக்குத்தானே வைத்துக்கொள்கிற ஆப்பு…
இந்த ஊர் உலகத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் தன்மானம் சுயமரியாதை என காலத்துக்கு ஒத்துவராத விஷயங்களை தலையைச் சுற்றி தூக்கி வீசிவிட வேண்டும்; இல்லாவிட்டால் கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பதிலிருந்து விடுதலை கிடைக்காது…
இப்படியான யாரும் மறுக்க முடியாத சீரியஸான கருத்துக்களுக்கு நக்கலைட்ஸ் குழு சிரிப்பு மசாலா துவி குடும்பஸ்தனாக்கியிருக்கிறது. இயக்கம் ராஜேஷ்வர் காளிசாமி
காதலித்தவளை மனைவியாக்கிக் கொள்வதில் பிரச்சனைகளை சந்திப்பதிலிருந்து, அவளது ஐ ஏ ஏஸ் படிப்புக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க, அப்பா அம்மாவின் ஆசைகளை நிறைவேற்ற, தொடர்ச்சியாக தன்னை அவமானப்படுத்தும் அக்கா வீட்டுக்காரரிடம் கெத்து காட்ட எல்லாவற்றுக்கும் லட்சக்கணக்கில் பணம் புரட்ட வேண்டிய சூழ்நிலை மணிகண்டனுக்கு. அந்த நேரமாகப் பார்த்து அதுவரை செய்து கொண்டிருந்த வேலைபோய்விட கடன் வாங்கி ஒருசில பிரச்சனைகளை ஓரளவு சமாளித்து, மீண்டும் கடன் வாங்கி தொழில் தொடங்கி அதை சரிவர செய்யமுடியாமல் அல்லாடி தள்ளாடுகிற நிலைமை. அதிலிருந்து அவரால் மீள முடிந்ததா, கடமைகளை நிறைவேற்ற முடிந்ததா இல்லையா என்பதே மீதிக் கதை
திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சனைகள் சூழ்ந்து தாக்கினாலும் தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் சிக்கல்களை பெரிதாக்கிக் கொண்டு அவதிப்படுவதன் வலிகளை உணர்த்தும்படி மணிகண்டன் தந்திருக்கும் நடிப்பு, ரசித்துச் சிரிக்கும்படியும் இருப்பது ஹைலைட்.
மணிகண்டனின் காதல் மனைவியாக வருகிற சாந்வி மேக்ஹனா ஈடுபாட்டுடன் போட்டித் தேர்வுக்கு படிப்பது, கணவனின் சுக துக்கங்களில் துணை நிற்பது, கணவனை கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பது என பாத்திரத்தில் ஒன்றிப் போயிருக்கிறார்.
மனைவியின் தம்பியை கேவலப்படுத்துவதை ரசித்துச் செய்கிற வேலை குரு சோமசுந்தரத்துக்கு. அதை 100 சதவிகிதம் உணர்ந்து செய்திருப்பது அவரது நடிப்பில் தெரிகிறது.
கதை திரைக்கதை வசனம் மூன்றிலும் சிரிப்புச் சிந்தனையை அட்டகாசமாக இணைத்துப்பிணைத்திருக்கிற நக்கலைட்ஸ் பிரசன்னா பாலசந்தர் மதுப்பிரியராக கதையுடன் ‘மிக்ஸ்’ ஆகி செய்யும் ரகளைகள் கலகலபுக்கு கேரண்டி. ஜென்சன் திவாகரின் போதையேறிய கூத்தடிப்புகளும் சுவாரஸ்யம் தருகிறது.
ஷான் ரோல்டன் குரல்தர, வைசாக் இசையில் ‘மானம் பறக்குது’ பாடல் உற்சாகமூட்டுகிறது. பின்னணி இசையும், சுஜித் என்.சுப்பிரமணியனின் ஒளிப்பதிவும் கதைக்களத்தை தரம் உயர்த்துவதில் உரிய பங்களிப்பு தந்திருக்கின்றன.
எளிமையான வாழ்க்கை வாழ்கிற குடும்பஸ்தர்கள் படுகிற பாட்டை எடுத்துக் காட்டுகிறோம் என்ற பெயரில் அழவைக்கும் காட்சிகளால் படத்தை நிரப்பாமல், அதே விஷயத்தை காமெடி கலாட்டாவாக்கியிருக்கிற குடும்பஸ்தன் குடும்பத்தோடு போய் பார்க்கத் தகுந்தவன்.