தமிழ்த் திரையுலகிலிருந்து உலக சினிமா வரிசையில் இடம்பிடிக்கிற மற்றுமொரு படம்.
பித்து பிடித்தது போன்ற மனநிலையிலிருக்கிறார் கதைநாயகன் பாண்டியின் முறைப் பெண் மீனா. அந்த நிலையிலிருந்து அவளை மீட்க, பேயோட்டும் சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார்கள் கதைநாயகனும் அவனது சொந்த பந்தங்களும். சாமியாரிடம் போய்ச் சேர்வதற்குள் வழியில் சிலபல சிக்கல்கள் உருவாகின்றன. அதையெல்லாம் கடந்து சாமியாரை சந்திக்கிறார்கள். அதன்பின் மீனா அந்த மனநிலையிலிருந்து மீண்டாளா இல்லையா என்பதே கதையின் முடிவு.
நாயகிக்கு பிடித்தது காதல் பேய் என்பது கதையிலிருக்கிற கனமான சங்கதி. நாயகிக்கு சாமியார் பேயோட்ட தயாரான தருணத்தில் நாயகன் எடுக்கும் முடிவில் சமூகம் கற்றுக் கொள்வதற்கான பாடம் இருக்கிறது.
பாண்டியாக நடித்திருக்கிற சூரியிடமிருந்து அப்படியொரு பக்குவப்பட்ட நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது. சாமியாரைப் பார்க்கப் போகும் வழியில் நேர்கிற இடைஞ்சல்களை அமைதியாக சகித்துக் கொள்கிற அவர், திடீரென சாமி வந்தவர் போல் ஆவேசமாகி மீனாவையும் உடனிருக்கும் உற்றார் உறவினரையும் அடிப்பது எதிர்பாராதது.
கதைநாயகி மீனாவாக அன்னா பென். தன் காதலுக்கு சமாதி எழுப்ப எல்லோருமாய் முடிவெடுத்த நிலையில், சூழ்நிலைக் கைதியாகிவிட்ட தனது பரிதாப நிலையை இறுக்கமான முகபாவங்களில் மிகச்சரியாக வெளிப்படுத்தியிருக்கும் அவர் படத்தில் பேசியிருப்பது ஒரு வரி வசனம் மட்டுமே. அந்த ஒரு வரி வசனம் ஒட்டுமொத்த படத்தையுமே தாங்கியிருக்கிறது.
சொந்த பந்தம், சாமியார் என மற்றவர்களின் நடிப்பும் கச்சிதமாக அமைந்திருக்க, ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக்கியிருக்கிறது.
படத்தில் பாடல்கள், பின்னணி இசை கிடையாது என்றாலும் அது குறையாக தெரியவில்லை.
சாமியாரைப் பார்க்கப் போகும் வழியில் காளை மாடு வழிமறிப்பது, அந்த காளையை ஒரு சிறுமி வந்து அதட்டி கூட்டிப் போவது என சுவாரஸ்யம் ததும்புகிற, ரசிக்க வைக்கிற பல காட்சிகள் படத்தில் உண்டு.
எடுத்துக் கொண்டது அழுத்தமான கதைதான் என்றாலும், மெல்ல நகரும் காட்சிகள் கமர்ஷியல் சினிமா ரசிகனுக்கு அதிருப்தியை உருவாக்கும்.
‘கூழாங்கல்’ என்ற வித்தியாசமான படத்தை இயக்கி திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி.எஸ். வினோத்ராஜ், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இந்த ‘கொட்டுக்காளி’யையும் தமிழ் சினிமாவின் தரமான தனித்துவமான படைப்பாக்கியிருக்கிறார்.
Rating 3.5 / 5