விலங்குகள் மனிதர்களால் பாதிக்கப்படும்போது, பாதிப்பை உருவாக்கியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர முடியுமா?
‘அதெல்லாம் நடக்காத கதை’ என்று தோன்றினாலும், அப்படி தண்டனை பெற்றுத்தர சட்டத்தில் இடமிருக்கிறது என்பதையும் அதற்கான வழிமுறைகளையும் எடுத்துச் சொல்லி, ‘விலங்குகளின் உயிரும் மனித உயிர்களைப்போலவே மதிப்புமிக்கது’ என்பதை வலியுறுத்துகிறது இந்த ‘கூரன்.’
பிரபலமான வழக்கறிஞர் தர்மராஜை ஒரு நாய் பின்தொடர்ந்து வருகிறது. அவர் அதற்கான காரணம் புரியாமல் குழம்பிப் போகிறார். அடுத்தடுத்த நாட்களில் அந்த நாயின் குட்டியை ஒரு பணக்காரன் கார் ஏற்றிக் கொன்றது, அது குறித்து புகார் கொடுக்க அந்த நாய் போலீஸ் ஸ்டேசன் போனது, ஸ்டேசனில் அடித்து விரட்டப்பட்டது என பல விவரங்கள் தெரியவருகிறது. நாயின் தவிப்பைப் பார்த்து மனம் கலங்கும் தர்மராஜ் குட்டியை கொன்றவன் மீது வழக்கு பதிவு செய்கிறார்.
கோர்ட்டில் நாயை பேசவைத்து குற்றவாளி யார் என்பதை அடையாளம் காட்ட முயற்சி செய்கிறார். அந்த முயற்சிகளால் நாய்க்கு நீதி கிடைத்ததா இல்லையா என்பது மீதிக்கதை.
அடிபட்டு உயிரிழந்த தன் குட்டியைப் பார்த்து கலங்கித் தவிப்பது, போலீஸ் ஸ்டேசனுக்கு போய் துரத்தப்பட்டு திரும்புவது, அன்பான அணுகுமுறையால் வழக்கறிஞரிடம் ஓட்டிக்கொள்வது, கோர்ட் கூண்டில் ஏறி நடந்த சம்பவங்களை குழப்பமின்றி எடுத்துச் சொல்வது என கதையின் பிரதான பாத்திரத்தை ஏற்றிருக்கிற நாயின் பங்களிப்பு ஆச்சரியப்படுத்துகிறது. அந்தளவுக்கு நடித்த நாய்க்கும் நடிப்பதற்குப் பழக்கியவருக்கும் பாராட்டுகளை ஃபிப்டி ஃபிப்டியாக பிரித்து வழங்கலாம்.
தர்மராஜாக வருகிற எஸ் ஏ சி, நாய்க்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை லட்சியமாக்கிக் கொண்டு செயலாற்றுகிற காட்சிகளை உணர்வுபூர்வமான, அலட்டலற்ற நடிப்பால் நிரப்பியிருக்கிறார்.
எஸ் ஏ சி.யின் உதவியாளராக இந்திரஜா ரோபோசங்கர், நாய் சொல்வதை ஏற்றுக்கொண்டு சட்டரீதியாக தீர்ப்பளிக்கிற ஒய் ஜி மகேந்திரா, குற்றவாளி தரப்பின் வழக்கறிஞராக பாலாஜி சக்திவேல், நாயை பேச வைக்க அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிற சத்யன், கண் பார்வையில்லாமல் மனதால் பார்த்த சாட்சியாக மாறி நிற்கிற ஜார்ஜ் மரியான், கதையின் நாயகனும் நாயகியுமான நாயை புத்திசாலியாக்கிய டிரெய்னராக சரவண சுப்பையா என அத்தனைப் பேருமே கதையின் ஒவ்வொரு பகுதியைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள்.
போதையில் கார் ஓட்டி நாய்க் குட்டியைக் கொன்றுவிட்டு, அதெல்லாம் ஒரு குற்றமேயில்லை என்ற நினைப்பில், ‘நான் குடிக்காமல் கார் ஓட்டுவதேயில்லை’ என கோர்ட்டில் தெனாவட்டாக பேசி கவனம் ஈர்ப்பவர், ‘லெசென்ஸ் என்றால் என்ன?’ என்பதுபோல் நீதிபதியிடம் கேட்டு கலகலப்பூட்டுபவர் இந்த படத்தின் இயக்குநர் நிதின் வேமுபதி.
‘காலங்கள் தானாய் மாறும்’ பாடலின் இசையால் மனதை வருடும் சித்தார்த் விபின் பின்னணி இசையை பரவாயில்லை ரகமாக டெலிவரி செய்திருக்கிறார்.
மார்ட்டின் தன்ராஜின் ஒளிப்பதிவு கச்சிதம்.
படத்தின் நீளத்தை அனுமார் வால் போல் நீளமாக இல்லாமல் ‘நாய்’வால் போல் சுருக்கமான அளவில் குறைத்துத் தந்திருக்கிறார்கள் எடிட்டர்கள் லெனினும் கே ‘மாருதி’யும்.
கமர்சியல் மசாலா படங்களை ‘குழந்தைகளோடு குடும்பமாகப் பார்க்கும் படம்’ என திரையுலகம் விளம்பரப்படுத்துவதுண்டு. அப்படியான கமர்சியல் மசாலாக்கள் இல்லாவிட்டாலும், சில காட்சிகள் கேலிக்கூத்து போல் தோன்றினாலும்,
‘விலங்குகள் நம் மொழியில் வார்த்தைகளால் பேச முடியாதுபோனாலும் அவற்றின் உணர்வுகளும் இழப்பின் வலியும் மனிதர்களுக்கு சமமானதுதான்’ என்பதை உணர வைத்திருப்பதால் இந்த படமும் குழந்தைகளோடு பார்க்கத் தகுந்த, அவசியம் பார்க்க வேண்டிய படம்தான்!
Rating 3.5 / 5