பிழைப்புக்காக வெளிநாடு போய் சம்பாதித்து, சொந்த ஊருக்குத் திரும்புகிற ஆண்கள் வாங்கிய கடனை அடைத்தல்; வீடு கட்டுதல்; தங்கைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தல்; பிஸினஸ் தொடங்குதல் என சிலபல விஷயங்களைச் செய்வார்கள். இந்த படத்தின் ஹீரோ துபாயில் பல வருடகாலம் வேலை செய்துவிட்டு, உள்ளூருக்கு வந்து திருமணமான பெண்கள் சிலரின் உயிரைப் பறிக்கிறார். அவரது நோக்கம் என்ன? அந்த பெண்கள் செய்த குற்றம் என்ன?
பெண்களைக் கொலை செய்யத் திட்டமிடுவது, அந்த திட்டத்தை சாமர்த்தியமாக செயல்படுத்துவது, தங்கைகள் மீது பாசமாக இருப்பது என நடிப்பில் கவனம் ஈர்ப்பதற்கான அம்சங்கள் இருந்தாலும், நாயகன் யுவன் பிரபாகர் நடிப்புக்கு புதியவர் என்பதால் தன்னால் இயன்றதை செய்திருக்கிறார்.
ஹீரோ மீது காதல் வயப்படுகிற முறைப் பெண், ஹீரோவின் மனைவி, தங்கைகள், நண்பர்கள் என பலரும் புதுமுகங்கள் என்பது அவர்களின் நடிப்பில் தெரிகிறது. அந்த குறையை ஓரளவு குறைப்பதற்காக போண்டா மணி, கராத்தே ராஜா, பெஞ்சமின், அம்பானி சங்கர், ரஞ்சன் என பழக்கப்பட்டவர்கள் அப்படியும் இப்படியுமாய் எட்டிப் பார்க்கிறார்கள்.
1000 ரூபாய் செலவழிக்க வேண்டிய விஷயத்துக்கு 100 செலவழித்தால் என்ன தரம் கிடைக்குமோ அந்த தரம் பின்னணி இசையிலும், ஒளிப்பதிவிலும் கிடைத்திருக்ககிறது. ‘கூடலூரு பொண்ணு குண்டுமல்லி கண்ணு’ பாடலில் இருக்கும் இதம் ‘ஏனோ இதயமே இசையுடன் துடிக்குதே’, ‘சின்னச் சின்ன கன்னங்கள்’ பாடல்களிலும் தொற்றியிருக்கிறது.
ஹீரோ கொலை செய்யத் தெர்ந்தெடுத்த பெண்கள் செய்கிற தவறு, குற்றச் செயலா? மன்னிக்கக்கூடியதா? என்பது விவாதத்திற்குரியது. அப்படியொரு கனமான கதைக்கருவை தெர்ந்தெடுத்த இயக்குநர் பிரபு திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால், கொலை தூரம் அபாரம் என ரசிகர்கள் பாராட்டியிருப்பார்கள்!