வெளிநாட்டு வாழ்க்கை சுகமா? சுமையா? பட்டிமன்றமே நடத்தலாம். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது சொர்க்கமாகக்கூட தெரியலாம். ஆனால், ‘உண்மை இப்படியும் இருக்கலாம்’ என வேறொரு கோணத்தில் அலசி ஆராய்ந்து பதிவு செய்திருக்கிற படம் இது.
சீனு, புலியேந்திரன் இருவரும் ஆஸ்திரேலியாவில் வசிக்கிற தமிழர்கள். சீனு சொந்த வீடு கட்ட லோன் வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். புலி அந்த நாட்டின் ‘பி ஆர்’ எனப்படுகிற நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு பணம் கட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.
சீனுவுக்கு ஆஸ்திரேலியாவில் வீடு கட்டி அதில் மனைவியோடும் குழந்தையோடும் வாழ வேண்டும் என்பது ஆசை, கனவு, லட்சியம். அவருக்கு கடன் கிடைப்பதில் ஏகப்பட்ட தடைகள். லோனுக்காக குறுக்கு வழியில் செல்கிறார்.
புலிக்கு, குடியுரிமை பெற்றால்தான் காதலியோடு மண வாழ்க்கையில் இணைய முடியும் என்கிற நிலைமை. மட்டுமல்லாது சொந்த ஊரிலிருக்கும் வீட்டை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பணம் தேவைப்படுகிறது. அவர் என்னதான் முயற்சி செய்தாலும் தேவையான பணம் கிடைக்காத சூழலில், கையிலிருக்கும் பணமும், கைவசமிருக்கும் வேலையும் பறிபோகிறது. திருட்டுப் பட்டமும் வந்து சேர்கிறது. இப்படியான சூழலில், இவரது ஆத்திரத்தின் வெளிப்பாட்டில் ஒருவரது உயிர் பிரிகிறது.
இப்படி பயணிக்கும் இருவேறு கதைகளில் சீனுவின் சொந்த வீட்டுக் கனவு நிறைவேறியதா? புலிக்கு குடியுரிமை கிடைத்ததா? கவிதைபோன்ற சில காட்சிகளோடு கடந்தோடும் திரைக்கதையில் பதில் கிடைக்கிறது. பதில்களைத் தரும் காட்சிகளில் மெல்லிய பரபரப்பும் விறுவிறுப்பும் இருக்கிறது.
நீ…..ண்ட இடைவெளிக்குப் பின், கவனிக்கத்தக்க பாத்திரத்தோடும் கனத்த உடம்போடும் சீனுவாக வந்திருக்கிறார் யுகேந்திரன் வாசுதேவன். லோன் பெறும் விஷயத்தில் ஏமாற்றத்தைச் சந்திக்கும்போது அதிர்வதில், சொந்த வீட்டுக் கனவு நனவாகாது என தெரியும்போது கலங்குவதில் பொருத்தமான உணர்வுகள் வெளிப்பட்டிருக்கிறது.
புலியாக வருகிற சித்தார்த் அன்பரசு, குடியுரிமை பெறுவதற்கு பணம் திரட்டும்போது சந்திக்கிற ஏமாற்றத்தின் வலி, தன்னுடன் பணிபுரியும் ‘மயிலாப்பூர்’காரனின் சாதிப்பாகுபாட்டால் ஏற்படும் ரணப்படும், தனக்கு திருட்டுப் பட்டம் கட்டியவனை சாதுர்யமாக பழிவாங்குவதில் புத்திசாலித்தனம் என உணர்வுபூர்வமாகவும் உணர்ச்சி வசப்பட்டும் தன் பங்களிப்பை கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார்.
யுகேந்திரனின் மனைவியாக வரும் மிமி லியானார்டோவைப் போல் அன்பான, ஆதரவான மனைவி அமைந்தால் எந்த கணவனும் எதையும் சாத்தியமாக்கலாம்; சாதிக்கலாம். அப்படியொரு நினைப்பு பலருக்கும் வருகிற அளவுக்கு கணவனின் கனவு நனவாக உறுதுணையாக இருக்கிறார். அளவான நடிப்பால் கவர்கிறார்.
சித்தார்த்தின் காதலியாக வருபவர், காதலன் அங்கும் இங்கும் பணம் கேட்டு தவிப்பதைப் பார்த்து, தன்னால் முடிந்த பணத்தை புரட்டித் தந்து துணை நிற்பது நெகிழ வைக்கிறது.
‘நீ யாரு, உன்னுடைய சாதி என்ன? நீயெல்லாம் மேல வரலாமா?’ என்றெல்லாம் கேட்டு உயர்சாதி ஆணவம் காட்டுவதற்கு அஸ்வின் விஸ்வநாதன் நல்ல தேர்வு. லோன் பெற்றுத் தருவதாய் சொல்லி ஏமாற்றுபவரிலிருந்து படத்தில் நடித்திருக்கிற இன்னும் ஒருசிலரும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.
கதைச்சுழலுக்கு பொருந்திப்போகும் பாடல் வரிகளுக்கு, பச்சிளங் குழந்தையின் கைகளால் வருடுவதுபோல் மென்மையான இசையைத் தந்திருக்கிற இசையமைப்பாளர்கள் ஹெல்வினும் சஞ்சய் அரக்கல்லும் பின்னணி இசையை அலட்டலின்றி கொடுத்ததில் காட்சிகளில் உயிரோட்டம் ததும்புகிறது.
முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படமாம் இது. அந்த பெருமை மனதில் நிற்கும்படி ஆஸ்திரேலியாவின் அழகை தன் கேமராவில் வளைத்துச் சுருட்டியிருக்கிறார் வசந்த் கங்காதரன்.
மசாலா சினிமாக்களுக்கான கமர்சியல் அம்சங்கள் பெரிதாய் இல்லாவிட்டாலும், எடுத்துக்கொண்ட வித்தியாசமான கதையாலும் அதை உணர்வோடும் அழகியலோடும் சொன்னவிதத்தாலும் மனதைக் கவர்கிறார் இயக்குநர் மோகன்ராஜ்!
வித்தியாசமான படங்களை விரும்புவோர் இந்த காழ் படம் ஓடும் தியேட்டரில் காலெடுத்து வைக்கலாம்.
Rating 3.5/5