தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த வீட்டை இழக்க வேண்டிய, அந்த வீட்டில் 250 வருடங்களாக இருக்கிற பாரம்பரிய அடையாளமான கட்டிலை பிரிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிற ஒருவன் அந்த கட்டிலை தன் வசமாக்கிக் கொள்ள முயற்சிக்கிறான். அந்த முயற்சி அவனுக்கு பல சோதனைகளை, வேதனைகளைத் தருகிறது. அதையெல்லாம் தாண்டி அவனால் கட்டிலை வசமாக்கிக் கொள்ள முடிந்ததா இல்லையா என்பதே ‘கட்டில்’ தாங்கியிருக்கும் கனமான கதை.
எடிட்டர் பி. லெனின் கதை, திரைக்கதை, வசனமெழுத, தயாரித்து இயக்கி கதைநாயகனாக நடித்திருக்கிறார் இ.வி. கணேஷ்பாபு. மூன்று தலைமுறை கதாபாத்திரங்களில் தோற்றத்தில் சின்னச் சின்ன வித்தியாசம் காட்டியிருக்கும் அவர், கட்டிலை பாதுகாக்கப் போராடும் காட்சிகளில் பரிதாபத்தை சம்பாதிக்கிறார்.
கரிப்பிணிப் பெண்ணாக வந்து இயல்பான நடிப்பைத் தந்திருக்கிற சிருஷ்டி டாங்கே சந்திக்கும் முடிவு கலங்க வைக்கிறது.
கதைநாயகனின் அம்மாவாக வருகிற கீதா கைலாசம் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடித்திருக்கிறார். (கீதா கைலாசம் நடிகையாக அறிமுகமான முதல் படம் இது.)
‘கட்டிலில்தான் உறங்குவேன்’ என அடம்பிடிக்கும் அந்த குட்டிச் சிறுவன் நிதீஷின் குழந்தைத்தனம் தவழும் நடிப்பை ரசிக்க முடிகிறது.
கன்னிகா, மீரா ராஜ், மெட்டி ஒலி சாந்தி, செம்மலர் அன்னம், சம்பத்ராம் இந்த படம் மூலம் நடிகர்களாக அறிமுகமாகியிருக்கிற எழுத்தாளர் இந்திரா செளந்தராஜன், ஓவியர் ஷ்யாம் என மற்ற நடிகர்களின் குறையில்லாத நடிப்புக்கிடையில் தொழிற்சங்கப் போராளியாக வருகிற பத்திரிகையாளர் சு.செந்தில்குமரன் தனித்து தெரிகிறார்.
கெஸ்ட் ரோலில் வந்துபோகிறார் விதார்த்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் ‘கோயிலிலே குடியிருந்தோம்’ பாடல் மனதுக்கு இதமூட்ட, ‘மூன்று தலைமுறை தாங்கிய கட்டில்’ பாடல் கதையோட்டத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.
‘வைடு ஆங்கிள்’ ரவி சங்கரின் ஒளிப்பதிவில் எளிமை தெரிகிறது.
கதைநாயகனிடம் லட்சக்கணக்கில் பணமிருந்தும் தொடர்ந்து அவமானங்களை, ரணங்களை அனுபவிப்பது ஏன் என்பது புரியவில்லை.
உருவாக்கத்தில் சில குறைகள் தென்பட்டாலும், சில காட்சிகள் நாடகத்ததனமாக நகர்ந்தாலும் நம் வீட்டிலுள்ள உயிரற்ற பொருட்களில் சிலவற்றை உயிருக்கு உயிராக நேசிக்கும் மனித இயல்புக்கு திரை வடிவம் கொடுக்க நினைத்திருப்பதை பாராட்டாமல் விட முடியாது.