பெண் கதாபாத்திரத்துக்கு அசுரபலம் தந்துள்ள படம். போதையால் ஏற்படும் சமூகச் சீர்கேடுகளை எடுத்துக் காட்டி, காவல்துறையின் கைகள் கட்டப்படாவிட்டால் அதில் பணிபுரிவோர் தெய்வங்களாக மாற வாய்ப்புண்டு என்ற கருத்தை முன்வைத்துள்ள ‘கலன்.’
துடிப்பான இளைஞன் வேங்கையன், அந்த ஊரின் கஞ்சா வியாபாரிக்கு தலைவலியாக உருவெடுக்க அவன் கதையை முடிக்கிறார்கள். அந்த உயிரிழப்புக்கு பழிவாங்க வேங்கையின் அம்மா கொலைவெறியோடு களமிறங்க அதன் பிறகு நடப்பதெல்லாம் அதிரடிதான், ரத்தம் தெறிக்கும் சம்பவங்கள்தான்… இயக்கம் வீரமுருகன்
மகனைக் கொன்றவர்களை பழி தீர்ப்பதில் ஆவேசத்தின் உச்சத்துக்கு போவதும் போலீஸாரின் விசாரணையில் திமிர் குறையாமல் நிற்பதுமாக ‘வெட்டுடையார் காளி’யின் பிரதியாக தீபா சங்கர்,
நண்பனின் தங்கையை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் சமூக விரோதிகள் மீது புலிப் பாய்ச்சலாய் கோபம் காட்டும் யாசர்,
அக்காவின் மகனை தான் பெற்றெடுத்த பிள்ளையாக நினைத்து, அவனது இழப்பில் மனம் உடைந்து பழிவாங்க வெறியுடன் புறப்படும் அப்புக்குட்டி,
கஞ்சா வியாரத்தில் கொடி கட்டிப் பறப்பவராகவும் காம வெறியராகவும் மிரட்டியிருக்கிற சம்பத்ராம்,
போதையேறிய கண்களோடு சுருட்டு பிடித்தபடி தெனாவட்டுப் பேச்சால் வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிற காயத்ரி,
ஒரு பக்கம் பார்த்தால் அராஜகப் போலீஸ் இன்னொரு பக்கம் மென்மனதுக் காரர் என கெத்தாக வலம் வருகிற சேரன்ராஜ் ஆகியோரோடு மற்ற பாத்திரங்களை சுமந்திருப்பவர்களும் சேர்ந்து திரைக்கதையின் பரபரப்பான பகுதிகளை சுறுசுறுப்பு குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆன்மிகத்தை தொடர்புபடுத்தி கட்டமைக்கப்பட்ட கதைக்களத்திற்கேற்ப, பிரதான கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப ‘கருப்பன் மீசை துடிக்குது’ பாடலை அதிர்வலை கூட்டும் அதிரடி இசையில் தந்திருக்கிற ஜெர்சன். பின்னணி இசையிலும் குறை வைக்கவில்லை.
ஜெயக்குமார், ஜேகே இருவரின் ஒளிப்பதிவில் ரத்தம் தெறிக்கும் கதைக்களம் பிரமாண்ட வடிவம் பெற்றிருக்கிறது.
நாடு முழுக்க போதையின் பாதையில் செல்வோர் அதிகரித்து, குற்றங்கள் பெருகிவரும் ஆபத்தான சூழலில் அப்படியான குற்றங்களில் ஈடுபடுவோரை களையெடுக்கும் விதமாக கதையை நகர்த்தியிருக்கும் இயக்குநர் வீரமுருகனின் சீற்றத்தில் நியாயமிருக்கிறது.
கலன் _ நல்ல கருத்தை விதைத்துள்ளதால் கணிசமாய் கிடைக்கும் பலன்.

