பரபரப்பான கடத்தல் சம்பவப் பின்னணியில் ‘சேர்க்கை சரியில்லையென்றால் அத்தனை சேதாரமும் வந்துசேரும்; உயிருக்கும் உலை வைக்கும்’ என கருத்து சொல்லியிருக்கும் படம்.
அந்த பணக்கார ஆசாமியின் மனைவியையும் அவர்களின் குட்டிப் பையனையும் ஒரு கும்பல் பணத்துக்காக கடத்துகிறது. அந்த குட்டிப் பையனை இளைஞன் ஒருவன் மீட்கிறான். அதனால் கடத்தல் கும்பலுக்கு எதிரியாகிறான். காவல்துறையின் பார்வையில் அவனே ‘கடத்தல்’காரனாகிறான். இரு தரப்பும் அவனை கட்டம் கட்ட முயற்சிக்க அவற்றிலிருந்து தப்பிக்க அவன் தீட்டும் திட்டங்களும் குழந்தையை அவனால் உரியவர்களிடம் ஒப்படைக்க முடிந்ததா என்பதுமே படத்தின் மிச்சசொச்ச கதை. இயக்கம் சலங்கை துரை
கதையின் நாயகனாக வருகிற எம் ஆர் தாமோதரின் தோற்றம் முரட்டுத்தனமாக இருந்தாலும் நடிப்பில் அம்மா மீது அளவில்லா பாசம், யாராலோ கடத்தப்பட்ட சிறுவன் மீது நேசம் என கனிவான மனதுக்காரராக நெகிழ வைக்கிறார். கொடுத்து வைத்த மனிதர்… தன்னை விரும்பும் இரு பெண்களை எப்படி டீல் செய்வது என புரியாமல் தடுமாறுகிற இன்ப அவஸ்தையையும் அனுபவிக்கிறார்.
ஹீரோயின் என்றால் ஹீரோவை கண்ணும் கருத்துமாய் காதலித்து, கதகதப்பாய் முத்தம் கொடுக்க வேண்டும் என்ற விதிப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் அளவான சதைப்பிடிப்போடும், அழகான இளமையோடும் இருக்கிற விதிஷாவும் ரியாவும்! ஹீரோவின் அம்மாவாக வருகிற சுதாவின் பல ஆண்டுகால அனுபவ நடிப்புக்கு அம்மா – மகன் சென்டிமென்ட் காட்சிகள் டன் கணக்கில் தீனி போட்டிருக்கின்றன!
வில்லனாக வருகிறவரின் அலட்டலான நடிப்பு, நண்பர்களாக வருகிறவர்களின் அமைதியான நடிப்பு, சிரிக்க வைக்க முயற்சி செய்கிற சிங்கம் புலியின் நடிப்பு, அந்த குட்டிப் பையனின் குழந்தைத்தனமான நடிப்பு அத்தனையும் திரைக்கதையின் விறுவிறுப்பான ஓட்டத்துக்கு சக்தியூட்டியிருக்கின்றன.
நிழல்கள் ரவி போன்ற தேர்ந்த நடிகர்களும் படத்தில் உண்டு.
‘காவல்துறையில் உயரதிகாரிகள் சொல்வதற்கு அடுத்தகட்ட அதிகாரிகள் மறுபேச்சு பேசாமல் ஏற்று செயல்படுவார்கள்’ என்ற வழக்கத்தை உடைத்து, ‘நீ சொல்றதை நான் எதுக்கு கேட்கணும்; நான் நினைப்பதை உன் கண்ணெதிரிலேயே செய்வேன்’ என முடிவெடுக்கிற துணிச்சலான அதிகாரியொருவரை படத்தின் கதாபாத்திரங்களில் ஒன்றாக காட்டியிருப்பது கவனிக்க வைக்கிறது.
மனம் வருடுகிற ‘என்ன பெத்த ஆத்தா’ பாடலில் இசையாளுமை காட்டியிருக்கிறார் எம் ஸ்ரீகாந்த். பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் என சுறுசுறுப்பான ஆரம்பக் காட்சி மூலம் கதைக்குள் நம்மை வேகவேகமாக இழுத்துப் போகும் இயக்குநர், அதன்பின் அம்மா மகன் பாசம் என்ற ரூட்டில் கதையின் போக்கை மாற்றியதில் சுவாரஸ்யம் குறைவு. ஆனாலும், கிளைமாக்ஸில் பரபரப்பு தீ பற்ற வைத்தது இயக்குநரின் புத்திசாலித்தனம்!
‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என சொல்ல வந்த கருத்தை சரியாக காட்சிப்படுத்திய விதத்தில் கடத்தலுக்கு கணிசமான மதிப்பெண் போடலாம்!