எதிர்காலத்தில் இப்படியெல்லாம் நடக்கலாம் என யூகித்து எழுதப்பட்ட கதைகளில் உருவாகும் திரைப்படங்களில் சுவாரஸ்யங்கள் கொட்டிக் கிடப்பது வழக்கம். 2028 காலகட்டத்தில் உலகப்போர் உருவாவதாக இயக்குநர் ஹிப்ஹாப் ஆதி சித்தரித்திருக்கும் இந்த கதையிலும் சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமில்லை.
2028-ல் ஐநா சபையிலிருந்து விலகும் சிலபல நாடுகள் ரிபப்ளிக் கூட்டணி என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்குகின்றன. அந்த அமைப்பு இந்தியாவைக் கைப்பற்றி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில், தன் மாமாவை முதலமைச்சராக்கி, தமிழக அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் நட்டி நட்ராஜ். ரிபப்ளிக் கூட்டணி தமிழ்நாட்டின் முதலமைச்சரை இந்தியாவின் பிரதமராக்குகிறது. நட்டி நட்ராஜின் செல்வாக்கு சரிகிறது.
நாட்கள் இப்படியாக நகர, நாடு முழுக்க கலவரம், ஏராளமான உயிரிழப்புகள் அதுஇதுவென சூழ்நிலை மோசமாகிறது. முதலமைச்சரின் மகளும் மகளைக் காதலிக்கும் இளைஞனும் (ஹிப்ஹாப் ஆதி) அந்த மோசமான சூழ்நிலைக்குள் சிக்குகிறார்கள்; கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். ஆதி மரணத்தின் விளிம்புக்கு போய் மீண்டு வருகிறார். உருவாகியிருக்கும் உலகப்போரை கடைசி உலகப்போராக்க முயற்சிக்கிறார். அதன் பலன்கள் என்ன என்பதே கதையோட்டம்…
அசத்தலான அறிமுகம், அடுக்கடுக்காய் அதிரடி என படம் முழுக்க புயல்வேகத்தில் சுற்றிச் சுழன்றிருக்கும் ஹிப்ஹாப் ஆதி, காதல் காட்சிகளில் தென்றலாய் தவழ்ந்திருக்கிறார்.
சூழ்ச்சிகளால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாய், கிங்மேக்கராய், புத்திசாலித்தனமான வில்லத்தனம் காட்டி கெத்தாக வலம் வந்திருக்கிறார் நட்டி நட்ராஜ். மனிதாபிமானமற்ற அவர், அப்போது பிறந்த குழந்தையை கையிலேந்தி நெகிழ்ந்துபோய் நிற்கும்போது நடிப்பில் வேறொரு பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார்.
முதல்வரின் மகளாக ஆட்சி அதிகாரத்தில் கம்பீரம் காட்டுவதும், காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் அதன் தன்மைக்கேற்பவும் அசத்தலாக வெளிப்பட்டிருக்கிறார் அனகா.
ராணுவ அதிகாரியாக ஹரிஷ் உத்தமன் ஆரம்பக் காட்சிகளில் டெரர் முகம் காட்டி, பின்னர் மனிதாபிமானத்தை தாங்கிப் பிடிக்கும் தூணாக மாறியிருக்கிறார்.
முதலமைச்சராக வந்துபோகிறார் நாசர். அரசியல்வாதியாக வருகிற அழகம் பெருமாளின் மேடைப் பேச்சுக்கள் கலகலப்பூட்ட, நடிகராக வருகிற ஷாராவின் அலப்பரைகள் ரசிக்க வைக்கின்றன.
முனீஷ்காந்த், சிங்கம்புலி கூட்டணி காமெடிப் பங்களிப்பில் கை கோர்த்திருக்கிறது.
ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்புக்கு சுறுசுறுப்பு தந்திருக்க, பாடல்கள் கதையோடு இணைந்தும் காட்சிகளின் இடையிடையேயும் புகுந்து புறப்பட்டிருக்கிறது.
ஒளிப்பதிவின் தரமும் கலை இயக்குநரின் உழைப்பும் படத்தின் பலம்.
படு வித்தியாசமான கதையை கையிலெடுத்த இயக்குநர் ஹிப்ஹாப் ஆதி, எளிய பட்ஜெட்டில் காட்சிகளில் பிரமாண்டத்தை கொண்டுவந்து தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்திருக்கிறார்.
Rating 3 / 5