திரைப்பயணத்தில் 50 வருடங்களை எட்டியிருக்கிற ராதாரவி கதையின் நாயகனாய் நடித்திருக்கும் கிரைம் திரில்லர்.
கொடைக்கானல் ரிசார்ட் ஒன்றில் ஒரு கொலை நடக்கிறது; கொலைகாரனை அடையாளம் கண்டுகொண்ட நபரிடம் அந்த கொலைகாரன், தன்னிடமிருக்கும் ‘கடைசி தோட்டா’வை வைத்து இன்னொருவரை தீர்த்துக் கட்டப் போகிறேன் என்கிறான். அந்த நபர் தனக்குத் தெரிந்ததை போலீஸிடம் சொல்லலாம் என்று பார்த்தால் அதையும் அந்த கொலைகாரன் தடுக்கிறான்.
கொலைகாரன் யாரையெல்லாம் குறிவைத்துக் கொல்கிறான்? அவனது கடைசி தோட்டாவுக்கு பலியாகப் போவது யார்? அவன் செய்யும் கொலைகளுக்கான காரணம் என்ன? என்பதையெல்லாம் விவரித்தபடி கடந்தோடுகிறது இயக்குநர் நவீன் குமாரின் திரைக்கதை.
கொலை அதுவென பின்னப்பட்டிருக்கும் இந்த கதையின் இன்னொரு டிராக்கில், அரசியல்வாதி ஒருவரின் பெரியளவிலான பணம் களவுபோய்விட, களவாடியது யார் என்பதை தேடிக் கொண்டிருப்பது காட்சிகளை தொய்வின்றி கடக்க உதவுகிறது.
ராதாரவிக்கு, ஓய்வு பெற்ற ராணுவ உயரதிகாரி கதாபாத்திரம். கையில் வாக்கிங் ஸ்டிக் வைத்தபடி நடந்தாலும் அதிலும் ஒரு கம்பீரத்தை வெளிப்படுத்தியிருப்பது, கொலையை நேரில் பார்த்த சாட்சியிடம் தனது செயலுக்கான பின்னணியை சொல்லி கலங்குவது, மனைவியை இழந்த சோகத்தை கச்சிதமாக பிரதிபலிப்பது என அனுபவ நடிப்பால் தன் பாத்திரத்தை பலப்படுத்தியிருக்கிறார்.
வழக்கு விசாரணையில் எப்படியெல்லாம் தெனாவட்டாக நடந்து கொள்ளலாம்; எப்படியெல்லாம் திமிர் காட்டலாம் என்பதற்கு ஸ்பெஷல் பயிற்சியெடுத்துக் கொண்டது போலிருக்கிறது போலீஸ் அதிகாரியாக வருகிற வனிதா விஜயகுமாரின் நடிப்பு.
ராதாரவியின் மனைவியாக வருகிற ஸ்ரீஜாரவியின் கனிவான முகம், தனக்கு துரோகம் செய்தவர்களைப் பார்த்தபோதும் மாறாதிருப்பது அந்த பாத்திரத்தின் மீதான மதிப்பைக் கூட்டுகிறது.
நடந்த கொலையைப் பார்த்து ‘ஹனிமூன்’ மூடை கெடுத்துக்கொண்டதோடு, கொலைகாரனை போலீஸிடம் காட்டிக்கொடுக்க முடியாமல் தவிக்கிற ஸ்ரீகுமாரின் நடிப்பு நேர்த்தி.
வையாபுரி கள்ளக்காதலியோடு ஜாலியாய் பொழுதை கழிக்கிற தருணங்கள் கலகலப்பூட்டுகின்றன.
ஓட்டேரி சிவாவும் அவரது சினேகிதர்களும் இன்னும் கொஞ்சம் சிரிப்பூட்டும்படி காடசிகளை அமைத்திருக்கலாம்.
நல்லவனாக இருந்து காதலியின் தூண்டுதலால் கெட்டவனாகிற யாசர், அவருடைய காதலி அபிராமி என மற்றவர்கள் கொடுத்த வேலையை சரியாய் செய்திருக்கிறார்கள்.
‘ஆழம் பாத்து காலவிடு; அடுத்தவன வாழவிடு’ கானா பாடல் இசையமைப்பாளர் யாருப்பா என கேட்க வைக்கிறது. அந்தளவுக்கு பாடலை ரசிக்க வைத்திருக்கும் வி.ஆர்.சுவாமிநாதன், பின்னணி இசையில் அடக்கி வாசித்திருக்கிறார்.
கதையின் பெரும்பகுதி ஒரே இடத்தில் நடந்தாலும் சலிப்பூட்டாதபடி கேமராவை கையாண்டிருக்கிறார் மோகன்குமார்.
காட்சிகள் பரபரப்பாக நகர்வதற்கு லோகேஷ்வரின் எடிட்டிங் பங்களிப்பு காரணமாக இருக்கிறது.
வழக்கமான பழிவாங்கல் கதையில் சீனியர் நடிகரை ஹீரோவாக்கி வித்தியாசம் காட்டியிருக்கிற இயக்குநர், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் ஈர்க்கும் விஷயங்களைப் புகுத்தியிருந்தால் ரசிகர்களுக்கு மிரட்டலான அனுபவம் கிடைத்திருக்கும்.