தன் பாலினச் சேர்க்கை (லெஸ்பியன்) சம்பந்தப்பட்ட கதையில், காட்சிகளில் அத்துமீறல் தவிர்த்த திரைக்கதையில் உருவான ‘காதல் என்பது பொதுவுடமை.’
பெண்ணியவாதியான தன் அம்மாவிடம், ஒரு பெண்ணைக் காண்பித்து அவளைக் காதலிப்பதாக மகள் சொல்ல, அந்த அம்மா சராசரி பெண்ணாக உணர்ச்சி வசப்பட்டு, அதிர்ச்சியாகி மகள் மீது கோபத்தைக் கொட்ட, மகள் தன் முடிவில் உறுதியாக இருக்க… அடுத்தடுத்த அதிரிபுதிரியான சம்பவங்களில் இன்றைய சமூகம் வெளிப்படையாக பேசத் தயங்குகிற, விவாதிக்கிற விஷயங்களைப் பேசியிருக்கிறார் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.
தன் பாலின ஈர்ப்புக்கு ஆளானவராக ஜெய்பீமில் அபாரமான நடிப்புத் திறமையைக் காண்பித்து தமிழ்த் திரையுலகைக் கவர்ந்த லிஜோமோல் ஜோஸ்.
இளமையையும் அழகையும் குவித்து வைத்திருக்கும் அவர் தோழி மீதான காதலை அம்மாவிடம் சொல்வது, தோழியை துணிச்சலாக வீட்டுக்கு வரவைத்து அதன் மூலம் உருவாகும் பிரச்சனைகளைச் சமாளிப்பது, தன் முடிவில் பிடிவாதமாக இருப்பது என காட்சிகள் அத்தனையிலும் உணர்வு ததும்பும் நடிப்பை நிரப்பி வைத்திருக்கிறார்.
மகளின் விருப்பத்தை அதிர்ந்து கலங்குவது, மகளை அடித்து ஆத்திரத்தை வெளிப்படுத்துவது, கொஞ்சம் கொஞ்சமாக நிலைமையின் விபரீதம் உணர்ந்து முடிவெடுப்பது என தரமான நடிப்பால் கவனம் பெறுகிறார் கதைநாயகியின் அம்மாவாக வருகிற ரோகிணி.
அப்பாவாக வருகிற வினித் மகளின் முடிவை தன்னால் மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையில் பேச்சு வார்த்தை நடத்தும்போது நடிப்பில் மெச்சூரிட்டி காட்டியிருக்கிறார்.
லிஜோவின் காதலியாக வருகிற அனுஷ் பிரபாகரின் அலட்டலில்லாத அழுத்தமான நடிப்பு,
கதைநாயகியைக் காதலித்து, பிறகு அவளைப் புரிந்துகொண்டு, அவளது காதலுக்கு உதவுகிற மனிதனாக காலேஷின் பக்குவப்பட்ட நடிப்பு,
தான் வேலை செய்கிற வீட்டுக்கு விசுவாசமாக இருப்பதையும் தாண்டி உயர்ந்த மனதுக்காரராகவும் நடந்துகொள்கிற தீபா சங்கரின் யதார்த்தமான நடிப்பு கதைக்களத்தை மெருகேற்றியிருக்கிறது.
காட்சிகளின் தன்மையுணர்ந்த பின்னணி இசை, நேர்த்தியான ஒளிப்பதிவு உள்ளிட்ட அம்சங்கள் படத்தை தாங்கும் தூண்களாய் மாறியிருக்கின்றன.
பெரும்பாலானோருக்கு எரிச்சல் தருகிற சப்ஜெக்டை எடுத்துக் கொண்டு, அந்த எரிச்சலடைகிறவர்கள்பார்த்தாலும் பாராட்டும்படியான கண்ணியம் மீறாத காட்சிகளோடு, சமூகத்தில் விவாதத்தை எழுப்பப்போகிற படைப்பாக ‘காதல் என்பது பொதுவுடமை’யை உருவாக்கியிருக்கும் படக்குழுவுக்கு பரிசாய்த் தரலாம் பாராட்டுப் பூங்கொத்து!