ஜீ.வி.பிரகாஷ், பாரதிராஜா நடித்துள்ள’கள்வன்’ படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லிபாபு தயாரிக்க, பி வி ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 4-ம் தேதி வெளியாகிறது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பட நாயகன் ஜீ வி பிரகாஷ் பேசியபோது, “இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ பாரதிராஜா சார்தான். அவருக்கு நானும் தீனாவும் வில்லனாக நடித்துள்ளோம். இந்த படத்தில் அவர் நடிப்புக்காக நிச்சயம் தேசிய விருது பெறுவார். அவருடன் நாங்கள் இருந்த நேரத்தை பொக்கிஷமாக வைத்திருப்போம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். அவரும் ராஜா சாரும் தமிழ் சினிமாவின் கிராமர் புக், என்சைக்ளோபீடியா. இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அதை நீங்கள் படம் வரும்போது புரிந்து கொள்வீர்கள். இவானா, தீனா எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்’ என்றார்.
இயக்குநர் பி வி ஷங்கர், “வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்” என்றார்.
தயாரிப்பாளர் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி டில்லி பாபு, “கிளைமாக்ஸ் காட்சிக்கு முந்தின நாள் யானைக்கு மதம் பிடித்து விட்டது. அதற்காக சில காலம் காத்திருந்தோம். படம் சிறிய பட்ஜெட் என்றாலும் டெக்னீஷியன்ஸ் எல்லோருமே பெரியவர்கள்தான். பாலக்காட்டில் கிளைமாக்ஸ் ஷூட்டிங் ஒரு வாரத்திற்கு மட்டும் ஒன்றரை கோடி செலவானது. பாரதிராஜா சார், ஜிவி பிரகாஷ், இவனா என எல்லாருமே சிறப்பாக நடித்துள்ள இந்த படம் வெற்றியடைய வேண்டும். பாரதிராஜா சாரின் பயோபிக் உருவாகிறது என்றால் அதை வெற்றிமாறன் இயக்க வேண்டும். நாங்கள் தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம்” என்றார்.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “காட்டுக்குள் சென்று படம் எடுத்தாலே அது வெற்றிப் படம்தான். மாற்றுத்திறனாளியை வைத்து ஹிட் படம் கொடுத்த ஒரே இயக்குநர் பாரதிராஜா. அவர் பலருக்கும் இன்ஸ்பிரேஷன். மத்திய அரசுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். ஸ்டுடியோவில் இருந்த சினிமாவை கிராமத்துக்கு எடுத்து வந்தவர் பாரதிராஜா. அவருக்கு உயரிய தாதா சாகேப் பால்கே விருது கொடுக்க வேண்டும். இவர் ஒரு சினிமா கம்பன். சீக்கிரம் அவருக்கு விழா எடுக்க வேண்டும். அவர் நடித்துள்ள ‘கள்வன்’ நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.
இயக்குநர் பாரதிராஜா, நாயகி இவானா, நடிகர் தீனா, படத்தின் வசனகர்த்தா ராஜேஷ் கண்ணா, இசையமைப்பாளர் ரேவா, பாடலாசிரியர் சிநேகன், கலை இயக்குநர் என்.கே. ராகவ், எடிட்டர் சான் லோகேஷ், இயக்குநர் பேரரசு, இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் தனஞ்செயன், புகைப்படக் கலைஞர் வெங்கட்ராம், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.