இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதைநாயகனாக நடித்துள்ள படம் ‘கட்டில்.’ பிரபல எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பாட்டுத்திருவிழாவாக சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இ.வி.கணேஷ்பாபு, ‘‘கவிஞர் வைரமுத்து ஐயா இந்தப் படத்தில் இருப்பது எங்களுக்குப் பெருமை. கட்டில் மரங்களுக்குள்ளே எங்கள் மரபணுக்கூட்டம் வசிக்கிறதே’ எனக் கட்டில் படத்தினை ஒரு வரியில் கொண்டுவந்துவிட்டார். லெனின் சார் இந்தப்படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தொகுப்பு செய்துள்ளார். அவர் வாழ்வில் நடந்த சம்பவம் தான் இந்தக்கதை. ஶ்ரீகாந்த் தேவா அவர்களின் 101வது படம் இது. அவருக்கு என்னுடைய ‘கருவறை’ குறும்படம் மூலம் தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி. அவர் ஒரு அட்சய பாத்திரம். நாம் எதிர்பார்ப்பதைத் தந்துகொண்டே இருப்பார். அர்ப்பணிப்புடன் நடிக்கிற சிருஷ்டி டாங்கே இந்தப் படத்தில் மிகச்சிறப்பான ஒரு கதாபாத்திரம் செய்துள்ளார். இந்தப் படத்திற்கு பிறகு அவரின் நடிப்புப் பயணத்தில் ஏறுமுகம் தான். படத்தில் என்னுடன் உழைத்த அனைவருக்கும் நன்றிகள்” என்றார்.
கவிப்பேரரசு வைரமுத்து, ‘‘தம்பி கணேஷ்பாபு என் பாசத்துக்குரியவர்; நேசத்துக்குரியவர். என்னோடு கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக பயணித்து வருகிறார். கட்டில் மாதிரியான சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. இது மாதிரி படங்களில் தான் புதிய கலைஞர்கள் நமக்கு கிடைப்பார்கள். பெரிய படங்கள் திட்டமிட்டுப் பார்க்க வைக்கப்படுகிறது, துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் கணேஷ்பாபு புல்லாங்குழல் வாசிக்க வந்திருக்கிறார்.
சிறு படங்கள் தான் நம்மைச் சிறகடித்துப் பறக்கவைக்கும் நம் சிந்தனையை வளர்க்கும். பழைய படங்களின் போஸ்டர் பார்த்தால் அதில் எல்லாமே பெண்களும் முக்கியமாக இடம் பெற்றிருப்பார்கள் ஆனால் இப்போது சினிமாக்களில் பெண்களின் படங்களைப் பார்க்க முடிகிறதா? பெண்ணுக்குச் சரிசமமான இடம் தந்த சினிமா தான் தமிழ் சினிமாவின் பொற்காலம், அந்த பொற்காலத்தை தன் கட்டில் மூலம் மீட்டுக்கொண்டு வந்திருக்கிறார் கணேஷ்பாபு. அவர் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.
இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா, ‘‘இந்தப் படத்தில் வைரமுத்து ஐயா வரிகளில் மூன்று பாடல்கள் இடம்பெற்றது மிகப்பெரிய கொடுப்பினை. கார்க்கி ஒரு பாடல் எழுதியுள்ளார். இ.வி.கணேஷ்பாபு இந்தப் படத்திற்காக என்னிடம் வந்தபோதே மூன்று மெலடிப் பாடல்கள் என்றார். மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்ததாக இ.வி..கணேஷ்பாபு அவர்கள் இயக்கிய கருவறை’ குறும்படம் மூலமாக எனக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. படம் மிக நன்றாக வந்துள்ளது. இது எனக்கு மிக முக்கியமான படம். ஆதரவு தாருங்கள்” என்றார்.
படக்குழு:-
தயாரிப்பு: Maple Leafs Productions’ இ.வி. கணேஷ்பாபு
கதை, திரைக்கதை, வசனம், எடிட்டிங்: பி.லெனின்
பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து, மதன் கார்க்கி
ஒளிப்பதிவு: வைட் ஆங்கிள் ரவிசங்கர்
இசை: ஶ்ரீகாந்த்தேவா
மக்கள் தொடர்பு: AIM சதீஷ், சிவா