நாய் ஒன்று சட்ட உரிமைக்காக போராடும் விதத்தில் அமைந்த கூரன் படத்தில் முதன்மை பாத்திரத்தில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்க, அவருடன் ஒய். ஜி. மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் உள்லிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் எஸ். சந்திரசேகரன் பேசும்போது, பொதுவாகவே ஒவ்வொரு திரைப்பட விழாவிலும் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போயிருக்கும் ஒரு வசனம். இது வித்தியாசமான படம். இதுவரைக்கும் நீங்கள் பார்க்காத படம். இந்த வார்த்தைகளை எல்லாருமே சொல்லி நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் என்னுடைய 45 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இது உண்மையிலேயே வித்தியாசமான படம். நான் உண்மையிலேயே வித்தியாசமானது என்று சத்தியமாக சொல்லக் கூடிய கதை இது.
பலவகையில் இது வித்தியாசமான படம்.
இந்த படத்தில் நாய்தான் கதாநாயகன். ஒரு ஈ பழிவாங்கி ஒரு படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஒரு யானை பழி வாங்கிய வெற்றிப் படத்தை, ஒரு பாம்பு பழிவாங்கிய வெற்றிப் படத்தை எல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். இதில் மனிதனை நாய் பழிவாங்குகிறது. தன்னுடைய போராட்டத்திற்கு நீதிமன்றம் வரை படியேறுகிறது. இது ஒரு வித்தியாசம்.
இரண்டாவது, இந்தப் படத்தில் கதாநாயகன் இல்லை, கதாநாயகி இல்லை டூயட் இல்லை. நடனம் இல்லை. நடித்தவர்களில் நான் 80 வயதுக்காரன், ஒய்.ஜி. மகேந்திரன் என் வயதுதான். இப்படி இதில் நடித்தவர்கள் முழுவதும் வயதானவர்கள் .அது ஒரு வித்தியாசம்.
என் எல்லா படத்திலும் ஏதாவது ஒரு மெசேஜ் இருக்கும். இந்தக் கதையை கேட்டவுடன் எனக்கு அது பிடித்திருந்தது. நாய் நீதிமன்றம் செல்கிறது. அதுவே புதிதாக இருந்தது. நான் எழுபது படங்களில் ஐம்பது படங்களில் மனிதன் நீதிமன்றம் சென்றது போல் தான் எடுத்திருக்கிறேன். நாயோ பூனையோ போனது போல் எடுக்கவில்லை. அதுதான் புதிதாக இருந்தது. இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் தங்களைத் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும்.
இந்தப் படத்தை இயக்குநர்கள் அமீர், பார்த்திபன் போன்றவர்கள் பார்த்திருக்கிறார்கள். டெல்லியில் இருந்து மேனகா காந்தி பார்த்திருக்கிறார். அனைவரும் படத்தைப் பார்த்து விட்டு உடனே எழுந்திருக்கவில்லை, கண்கலங்கினார்கள்.
சினிமா என்பது சாதாரணமானதல்ல. இந்தப் படத்தில் கத்தி இல்லை; ரத்தம் இல்லை; துப்பாக்கி சத்தம் இல்லை; ஆனால் ஒரு சக்தி வாய்ந்த விஷயம் இருக்கிறது. அதை நாங்கள் சத்தமாகத் தீவிரமாகச் சொல்லாமல் உணர்வுபூர்வமாக எதார்த்தமாக சொல்லி இருக்கிறோம்.
இதில் நடித்திருக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் அந்த பைரவா நாய்தான். நாங்கள் எல்லாரும் உதிரிப் பூக்கள்தான், துணை நடிகர்கள்தான். இதில் நடித்திருக்கும் நான் உள்பட அனைவருக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.
நான் பத்து ஆண்டு காலமாகச் சில படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு திருப்திகரமாக அமைந்த படம் இது. நான் அனுபவித்துச் செய்து இருக்கிறேன்.
இரண்டு மணி நேரம் அழகாக அமர்ந்து பார்க்க வைக்கும் படியான படம்.
மூன்று மணி நேரப் படமாக உருவானது அதை எடிட்டர் மாருதி இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் ஆக்கினார். லெனின் சார் படத்தைப் பார்த்தார். அதில் பத்து காட்சிகளைத் தூக்கிவிட்டு இருபது நிமிடங்களைக் குறைத்து விட்டார். படம் இரண்டு மணி நேரம் தான். அவ்வளவு நேர்த்தியாக உள்ளது” என்றார்.