சர்வதேச திரைப்பட விழாக்கள், கோவா பனோரமா சர்வதேச திரைப்பட விழா, சென்னை சர்வதேச திரைப்பட விழா என பலவற்றில், வெளியாவதற்கு முன்பே கலந்துகொண்டு பல்வேறு விருதுகளைக் குவித்த படம் ‘கிடா.’
பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கிய இந்த படம், மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும், ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப் பிணைப்பை சொல்லும் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. படத்தின் முழுமையான படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் நடந்துள்ளது.
இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி இணைய ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபகாலமாக தொடர்ந்து வன்முறைக்களமாக இருக்கும் தமிழ் சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எளிமையான உணர்வுகளை, அழகாக சொல்லும் அற்புதமான வாழ்வியல் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. படம் மாறுபட்ட சினிமா அனுபவத்தை தரும் படைப்பாக இருக்குமென்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது.
இந்த படத்தை ‘ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ்’ நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைதன்யா தயாரித்துள்ளனர்.
படத்தின் கதை ஒரு தீபாவளி திருநாளில் நடைபெறுவதாக அமைந்துள்ளது. அந்த படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதையடுத்து படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படக்குழு:-
இசை – தீசன்
ஒளிப்பதிவு – எம். ஜெயப்பிரகாஷ்
கலை இயக்கம் – கே.பி. நந்து
பாடல்கள் – ஏகாதசி
எடிட்டர் – ஆனந்த் ஜெரால்டின்
ஆடியோகிராஃபி – தபஸ் நாயக்