கடந்த 22 வருடங்களாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கிறார் நிவாஸ் ஆதித்தன். நடிகரும், தயாரிப்பாளருமான ஆதித்தனின் ஒன்பதாவது மகன் இவர். தயாரிப்பாளரின் மகன் என்றாலும் சொகுசான வாழ்க்கை வாழவில்லை. தந்தை, தயாரிப்பில் அனைத்தையும் இழந்த பின்பு பிறந்து, இளமையில் வறுமையிலேயே வளர்ந்திருக்கிறார்.
சிலபல முயற்சிக்கு பிறகு செல்வா இயக்கத்தில் நாங்க என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் கதாநாயகனாக, வில்லனாக தோழனாக, முக்கிய பாத்திரங்களில் என கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்து முடித்து, தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ‘காக்கா முட்டை’யில் ஐஸ்வர்யா ராஜேஷின் கணவனாக நடித்தவரும் இவரே.
தற்போது நிவாஸ் ஆதித்தன் ‘குமரேசன் கலட்டர்‘ என்ற பெயரில் குறும்படம் ஒன்றை இயக்கி இருக்கிறார். முழுக்க முழுக்க ஐ போனிலேயே படமாக்கியிருக்கிறார். அந்த படம் பல்வேறு நாடுகளின் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை குவித்துக் கொண்டிருக்கிறது. இளமையில் வறுமை, அந்த வறுமையிலும் சின்ன சின்ன விஷயங்களில் மகிழ்ச்சி காணும் கனவு காணும் ஒரு சிறுவனின் கதை, எந்த பாசாங்கும் இல்லாத இயல்பான படைப்பாக உருவாகியுள்ளது. வழக்கமாக இதுபோன்ற படங்கள் மனதை உலுக்கும், கண் கலங்கச் செய்யும். குமரேசன் கலட்டர் புன்னகையோடு கண்ணீர் ததும்பச் செய்கிறது.