பிள்ளைகள் அம்மாவை அரவணைப்பதன் அவசியத்தை எடுத்துச் சொல்ல முயற்சி செய்திருக்கும் படம்.
ஐந்து வாரிசுகளுக்குத் தாயான பேபி சற்றே மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையின்போது கூடுதலாக மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அதே மன உளைச்சலோடு காணாமல் போய்விடுகிறார். அவர் கொல்கத்தாவில் இருப்பதாக போலீஸ் மூலம் தகவலறிந்து அவரை அழைத்து வர அவருடைய மகன் தினேஷும், மாறனும் கொல்கத்தா போய்ச் சேர்கிறார்கள்.
போன அவர்கள் அம்மாவை பார்க்கக்கூட முடியாமல் தவிப்பது, அம்மாவை சென்னைக்கு அழைத்து வருவதற்காக போலீஸிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது, கோர்ட்டில் ஆஜராவது என சிலபல சிக்கல்களை சவால்களை சந்திக்கிறார்கள். அதையெல்லாம் கடந்து அவர்களால் அம்மாவை மீட்க முடிந்ததா இல்லையா என்பதே கதை…
ஊர்வசிக்கு அவரது இத்தனை வருட நடிப்புப் பயணத்தில் சிகரம் வைத்ததை போன்ற கதாபாத்திரம். ஐந்து பிள்ளைகளுக்குத் தாயாக, பேரன் பேத்தி எடுத்தவராக வடிவமைக்கப்பட்ட தனது பாத்திரத்தை பொருத்தமான நடிப்பால் தாங்கிப் பிடித்திருக்கிறார். மனநலம் பாதிக்கப்ப்ப அவர் மனம் போன போக்கில் நடந்துகொள்வதெல்லாம் ஊராருக்கு தலைவலியாக அமைய அவை ரசித்துச் சிரிக்கும்படி இருக்கிறது. மனநல மருத்துவமனையின் கட்டுப்பாடுகளை சகித்துக்கொள்ள முடியாமல் வேதனைக்கு ஆளாகிற, தன்னை அடித்த மகனுக்கு கொஞ்ச நேரத்திலேயே உணவு ஊட்டுகிற தருணங்கள் நெகிழ வைக்கின்றன.
ஊர்வசியின் இளைய மகனாக வருகிற தினேஷ் அம்மாவால் ஏற்படும் சங்கடங்களை பொறுத்துக் கொண்டு பாசமாக நடந்து கொள்வது, தன் மனதைப் புரிந்து கொள்ளாமல் தன்னை விரோதியாக நினைக்கிற அண்ணனின் சுடு சொற்களால் காயமடைவது என உணர்வுகளின் கலவையாக மாறியிருக்கிறார்.
நிதானத்தில் இருக்கும்போதும், குடிபோதையில் மிதக்கும்போதும் தம்பியை திட்டுவதையே தொழிலாக வைத்துக் கொண்டிருக்கிற பாத்திரத்தில் மாறன். காமெடி நடிகராக பார்த்துப் பழகிய அவர் தேர்ந்த நடிப்பைத் தருகிற கேரக்டர் ஆர்டிஸ்டாக மாறியிருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. இடையிடையே அவரது ஸ்டைலில் ஜாலிகேலியான வசனங்களை வீசி கலகலப்பூட்டவும் தவறவில்லை.
ஊர்வசிக்கு மகள்களாக, மருமகள்களாக வருகிறவர்களின் நடிப்பு கச்சிதம்.
கொல்கத்தாவில் பேபி ஊர்வசியை மீட்பதில் உதவுகிற, ‘மூர்த்தி’ கதாபாத்திரம் கவர்கிறது. (இந்த படம், நிஜத்தில் இயக்குநரின் பெரியம்மா காணாமல் போய் அவரை தேடிக் கண்டுபிடித்த அனுபவத்திலிருந்து உருவாகியிருக்கிறது. நிஜத்தில் இயக்குநரின் பெரியம்மாவை மீட்க உதவியவரும் இவரே.)
பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என மற்ற துறைகளின் பங்களிப்பு காட்சிகளை மெருகேற்றியிருக்கிறது.
வயதான காலத்தில் அம்மாக்களுக்கு பிள்ளைகளின் அன்பும் அரவணைப்பும் எந்தெந்த விதங்களில் தேவைப்படும் என்பதை சரியான கோணத்தில் காட்சிப்படுத்திய விதத்தில் ஜெ பேபியின் இயக்குநர் சுரேஷ் மாரியையும், நல்ல படத்தை தயாரித்ததற்காக இயக்குநர் பா. இரஞ்சித்தையும் பெரிதாய் பாராட்டலாம்.