ஃபீல் குட் ரொமாண்டிக் என்டர்டெய்னராக ஹரிஹரன் ராம்.எஸ் எழுதி இயக்கியுள்ள படம் ‘ஜோ.’ ரியோ ராஜ் நாயகனாகவும் பவ்யா திரிகா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தை விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர். டி.அருளானந்து, மேத்யூ அருளானந்து தயாரித்துள்ளனர்.
இந்த படம் நவம்பர் 24-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் பிரி ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடந்தது.
நடிகர் புகழ், சக்தி ஃபிலிம் ஃபேக்டர் சக்திவேலன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஃபைனான்சியர் அன்புச்செழியன், நடிகர் ஏகன், நடிகர் அன்புதாசன், நடிகர் கெவின், நடிகர் விகே, நடிகரும் இணை இயக்குநர் குட்டி ஆனந்த், இசையமைப்பாளர் சித்துகுமார், நடிகை மாளவிகா, பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணன், பாடலாசிரியர் கிரண் வரதன், கலை இயக்குநர் ஏ.பி.ஆர்., ஒளிப்பதிவாளர் கே.ஜி. விக்னேஷ், எடிட்டர் கே.ஜி. வருண், நடன இயக்குநர் அபு, நடன இயக்குநர் சார்ல்ஸ், விஜே ராக்கேஷ், கவின், ஆர்.ஜே. இளங்கோ குமரன், நடிகர் தீனா உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.
படத்தின் ஹீரோவான ரியோ ராஜ், பிளாக் ஷீப் விக்னேஷ் காந்துடன் இணைந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் சீனு ராமசாமி, ‘‘ரியோ, இயக்குநர் ஹரிஹரன் என யாருமே எனக்கு பெரிய அறிமுகம் இல்லை. தயாரிப்பாளரை மட்டுமே எனக்கு தெரியும். அவர்தான் இந்த படத்தை என்னை பார்க்கச் சொன்னார். படம் பார்த்த பின்பு படத்தின் புரோமோஷன்காக ஒரு சாட்சியாக நான் வந்திருக்கிறேன். அவ்வளவு அருமையான படம் இது. படம் பார்த்த பின்பு எனக்கு 20 வயது குறைந்தது போல உள்ளது. இந்த படம் பார்த்த பின்பு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஏதாவது சொல்ல வேண்டுமென்று என்னை உந்தியது. சமீபத்தில், மனநிறைவோடு நான் பார்த்த படம் இது. குடும்பத்தோடு எல்லோரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்கலாம்.
ஒரு மனிதனை காதல் எப்படி தோற்கடிக்கிறது வாழவைக்கிறது என்பதை இந்த படம் சொல்லும். இந்த படம் என்னை பயங்கரமாக தாக்கி அழ வைத்தது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இதில் ஒரு பாடல் பாடியுள்ளார். அவரை என் படத்தில் கூட இப்படி நான் பயன்படுத்தவில்லை. அவர் குரல் வரும் போது எல்லாம் மனம் கலங்குகிறது. படம் நல்ல திரையரங்க அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்” என்றார்.
படத்தின் இயக்குநர் ஹரிஹரன், ‘‘2015 வாக்கில் இந்த கதையை ரியோ அண்ணனிடம் சொன்னேன். விடிய விடிய படத்தின் கதையை கேட்டுவிட்டு நிச்சயம் செய்கிறோம் என்றார். அன்றிலிருந்து இன்று வரை இந்த படத்தை தூக்கி சுமந்து கொண்டுள்ளார். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும், இந்த நிகழ்விற்கு வந்து பெரிய வார்த்தைகள் சொல்லி வாழ்த்தியவர்களுக்கும், நான் இயக்குநராக இந்த இடத்திற்கு வருவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
நிகழ்வில் தயாரிப்பாளர் டி. அருளானந்து, ‘‘படத்தின் கதையை ரியோ சொன்னது மிகவும் பிடித்திருந்தது. உடனே தயாரிக்கலாம் என முடிவெடுத்து விட்டோம். படத்தை இதுவரை எட்டு முறை பார்த்து விட்டேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதிதாக இருக்கிறது. படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கையுள்ளது” என்றார்.
தயாரிப்பாளர் மேத்யூ, ‘‘படம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் என்றால், படம் பார்க்கக் கூடியவர்களுக்கு ஏதேனும் ஐந்து, பத்து நிமிடங்கள் தங்களுடன் இணைத்துக் கொள்ளும்படியான மொமெண்ட் நிச்சயம் இருக்கும். முதல் பாதி முழுவதுமே எனக்கு அப்படித்தான் இருந்தது. படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்” என்றார்.
நாயகி பவ்யா, ‘‘இந்தப் படத்தில் என்டர்டெயின்மென்ட், ஆக்ஷன், எமோஷன், லவ் என எல்லாமே இருக்கும். ஒரு உண்மையான காதலை உணர வேண்டும் என்றால் கண்டிப்பாக ‘ஜோ’ படத்தை நீங்கள் பாருங்கள்” என்றார்.
பாடகர் ஆண்டனி தாசன், ‘‘ரியோவுக்காக இரண்டாவது முறை பாடியது மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களுக்கு பாடல் நிச்சயம் பிடிக்கும். ரசிகர்களைப் போலவே நானும் படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.