‘இளம்பெண்களை கொன்று குவிக்கும் சைக்கோ கில்லரை வேட்டையாடும் போலீஸ்’ என்ற சிம்பிளான ஒன்லைனில் உருவான ‘இறைவன்.’
நகரத்தில் இளம்பெண்கள் கடத்தப்பட்டு, கால்கள் அறுக்கப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டு, வாய் உடைக்கப்பட்டு குரூரமாக கொலை செய்யப்படுவது தொடர்கிறது. மக்களிடம் பயம் தொற்றுகிறது.
காவல்துறை உயரதிகாரியான ஜெயம் ரவி தலைமையிலான குழு கொலைகளை செய்பவனை தேடிப்பிடித்து சிறையிலடைக்கிறது. அங்கிருந்து அந்த சைக்கோ தப்பிவிட கொலைகள் தொடர்கிற சூழ்நிலை. மீண்டும் களமிறங்குகிறது காவல்துறை. அதன் ரிசல்ட் என்ன என்பதே திரைக்கதை. இயக்கம் ஐ அஹமது
ஏற்றிருக்கும் போலீஸ் வேடத்துக்கு உடற்கட்டாலும் உடல்மொழியாலும் தேவையான கம்பீரத்தை கொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி.
கதாநாயகனை ஒருதலையாக காதலிப்பதை தவிர நயன்தாராவுக்கு பெரிதாய் எந்த வேலையுமில்லை. அந்த வேலையை இயல்பாக செய்திருக்கிறார்.
சைக்கோவாக ராகுல் போஸ். பெண்களை கொடூரமாக சித்ரவதை செய்து அவர்கள் வலியில் துடிப்பதை ரசித்து, குரூரமாக கொலை செய்யும் காட்சிகளில் உயிர் நடுங்கச் செய்கிறார்.
மற்றொரு சைக்கோவாக வினோத் கிஷன். அளவோடு நடித்திருந்தால் பாராட்டியிருக்கலாம்.
தன் மகளின் சடலத்தைப் பார்த்து, அவளுக்கு வலிக்காமல் நானே போஸ்ட் மார்ட்டம் செய்வேன்’ என்று சொல்லி கதறியழும் சார்லியின் நடிப்பு மனம் கனக்கச் செய்கிறது.
புத்திசாலித்தனமாக எதையும் செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும்படி உருவாக்கப்பட்ட காவல்துறை அதிகாரி வேடங்களில் ஆஷிஷ் வித்யார்த்தி, பக்ஸ்… இருவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஹீரோவுக்கு நண்பனாக வருகிற நரேன் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் பங்களிப்பு கச்சிதம்.
யுவனின் பின்னணி இசை மிரட்டலான காட்சிகளுக்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கிறது.
ஹரி வேதாந்தின் ஒளிப்பதிவு நேர்த்தி.
சைக்கோ கில்லர் இருக்கும் இடத்துக்கு போலீஸ் மிக சாதாரணமாக போய்வருவதெல்லாம் படத்திலிருக்கும் புதுமை.
ரத்த ஆறு ஓடுகிற சைக்கோ கில்லர் படங்கள் உங்கள் சாய்ஸ் என்றால் ‘இறைவனை’ பார்க்க தியேட்டருக்கு கிளம்பலாம். மற்றவர்கள் அப்படியான படங்களை எடுப்பவர்களை திருத்த ‘கடவுளை’ பிரார்த்திக்கலாம்!