‘அதே டெய்லர்; அதே வாடகை’ டைப்பில் ‘அதே லஞ்சம்; அதே ஊழல்; அதே தண்டனை’ என வர்மக்க(கொ)லை மன்னன் சேனாபதியை மீண்டும் களமிறங்கியிருக்கிற ‘இந்தியன் 2.’
அன்று அரசு அதிகாரிகள் கடமையைச் செய்யவும் கடமையை மீறவும் லஞ்சம் வாங்கினார்கள். இந்தியன் என்ற பெயரில் சேனாபதி புறப்பட்டார். லஞ்சம் வாங்குவது குற்றம் என்ற குற்றவுணர்ச்சி துளியுமில்லாமல் கல்லா கட்டிக்கொண்டிருந்த சிலரைக் குறிவைத்தது அவரது கத்தி. அந்த கத்தி அவரது மகனையும் காவு வாங்கியது 28 வருடங்கள் முந்தைய வரலாறு.
ஆனாலும் இன்றளவும் லஞ்சம் ஒழியவில்லை. ஊழல்வாதிகளும் பெருகியிருக்கிறார்கள். அவர்களை அடக்காமல் விட்டாலும் அழிக்காமல் விட்டாலும் நாட்டுக்கு ஆபத்து.
மீண்டும் களத்துக்கு வருகிறார் இந்தியன். இது சீஸன் 2. தீயவர்களை களையெடுப்பதையும் இரண்டாக பிரிக்கிறார். அதாவது பெரியளவில் ஊழல் செய்து பல்லாயிரம் கோடி, பல லட்சம் கோடி என ஊழல் செய்து சுருட்டியவர்களை அவர் பார்த்துக் கொல்வார். தன் அதிகாரத்துக்கு ஏற்ப லஞ்சம் வாங்குகிறவர்களை அவரவர் வீட்டிலுள்ள பிள்ளைகளே சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.
சேனாபதியின் திட்டத்தை இளைய தலைமுறையினர் ஏற்றுக்கொள்ள, அவர்களின் அப்பா, அம்மா, மாமா என நாடு முழுக்க அதிகாரத்திலுள்ளவர்கள் சிக்குகிறார்கள். உலகமகா ஊழல்வாதிகளை சேனாபதி தன் பாணியில் அழித்துக் கொண்டிருக்கிறார்.
கதை இப்படி நகர்ந்துகொண்டிருக்க, சேனாபதியை மீண்டும் களத்துக்கு கூட்டிவந்தவர்களே, அவரை வெறுக்கிறார்கள். அவர்களுடன் பொதுமக்களும் சேர்ந்துகொள்ள, அவரை ஒழிக்க நினைக்கும் ஊழல்வாதிகளும் கட்டம் கட்ட சேனாபதியின் நிலைமை மோசமாகிறது. சட்டத்தின் பிடியில் வசமாக சிக்குகிறார்.
‘அந்த மனுசன் பண்ணதுல தப்பில்லையே, அவருக்கு இப்படியொரு நிலைமையா?’ என நாம் நினைப்பதற்குள், ‘சில்வண்டு சிக்கும். சிறுத்தை சிக்காதுலே’ என்று சொல்லாமல் சொல்லி தப்பித்துப் போகிறார். அப்படியே விட்டுவிடாமல் ‘இது டீசர்தான் அடுத்த பாகத்தில் அதிரடி காத்திருக்கு’ என்று சொல்லும்படி 3-ம் பாகத்துக்கான டிரெய்லரை இணைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
உலகநாயகன் கமல்ஹாசன் விதவிதமான கெட்டப்பில் வந்தாலும் தசாவரத்தில் அவரை பத்து விதமான பார்த்துவிட்டதால் பத்தோடு பதினொன்றாகவே நினைக்கத் தோன்றுகிறது. ஆனாலும், ஏர்போர்ட்டில் பிடிபடும்போது வெளிப்படும் தோற்றம் சத்தியமாக அசத்தல்தான். யார் என்ன மடக்கிப் பிடித்தாலும் எஸ்கேப்பாகும் சாமர்த்தியம் ரசிக்க வைக்கிறது. மற்றபடி வியந்து பாராட்ட பெரிதாய் ஏதுமில்லை.
எஸ் ஜெ சூர்யா அடுத்த பாகத்தில் வில்லத்தனத்தில் வெறியாட்டம் போட இந்த பாகத்தில் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். அவர் அணிந்திருக்கும் நகைகள் கிட்டத்தட்ட 50 கிலோ இருக்கலாம். ஐயோ பாவம் அந்த கழுத்து.
சித்தார்த், அவரது காதலியாக ரகுல் பிரித்சிங், தோழியாக பிரியா பவானி சங்கர், தோழனாக கனெக்சன் ஜெகன், கூடவே டெல்லி கணேஷ், தம்பி ராமையா, வித்தியாச மேனரிசம் காட்டும் வினோத்சாகர், சேரன் ராஜ், இமான் அண்ணாச்சி என படத்தில் கதைக்கேற்ப பங்களிப்பு தந்திருக்கும் நடிகர், நடிகைகள் ஏராளம். முதல் பாகத்தில் சேனாபதியை கைது செய்த சி பி ஐ அதிகாரியின் வாரிசாக வருகிற பாபி சிம்ஹா அலட்டலாக ஏதேதோ செய்கிறார். அவ்வளவாக கவரவில்லை.
நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா, மாரிமுத்து உள்ளிட்டோர் இன்று நம்முடன் இல்லை. படத்தில் இருக்கிறார்கள். அந்த வகையில் சந்தோஷம்.
அனிருத் பின்னணி இசைக்காக இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். பாடல்களில் ‘ராக்ஸ்டார்’ பெறுவது பாஸ்மார்க் மட்டுமே!
ரவிவர்மனின் ஒளிப்பதிவும், கலை இயக்குநரின் உழைப்பும் படத்தின் பெரும்பலம்.
காட்சிகளில் இருக்கும் பிரமாண்டம், அசத்தலான சில காட்சிகள் தவிர… காலம் மாறியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளாமல் அமைத்திருக்கும் திரைக்கதை படத்தின் பலவீனம்.
‘உணவு எப்படியிருந்தாலும் பரவாயில்லை; ஊறுகாய் சுவையாக இருந்தால் போதும்’ என்ற மனநிலை உங்களுக்கு உண்டா? ஆம் என்றால் இந்த ‘இந்தியன் 2’ உங்களுக்கு திருப்தி தரும். மற்றவர்கள் 3-ம் பாகத்துக்கு காத்திருக்கலாம்!
Rating 3 /5