காதலித்து, மணவாழ்க்கையில் இணைந்து உற்சாகமாக வாழ்ந்து வரும் சதா நாடார், மோனிகா செலேனா தம்பதி தங்களை இயக்குநர்களாகவும் தயாரிப்பாளர்களாகவும் தகுதி உயர்த்திக் கொண்டு உருவாக்கியிருக்கும் படம்.
நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என எல்லோருமே புதுமுகங்கள். ஆனாலும் அது பெரிதாய் தெரியாதபடி எல்லோருமே, ஃபெர்மாமென்ஸில் பாஸ்மார்க்குக்கும் சற்றே அதிகம் கொடுக்கலாம் என்கிற லெவலுக்கு உழைத்திருக்கும் ‘ல்தகா சைஆ.’
தன் கனவில் நடப்பதெல்லாம் நிஜத்திலும் நடப்பதால் பயந்து போயிருக்கிறான் ராம். அந்த பயத்தை அதிகரிக்கும் விதமாக இன்னொரு கனவு வருகிறது. அதில், அவன் சந்தித்த பாலியல் தொழிலாளி இறந்து போக, என்ன செய்வதென புரியாமல் அவளை தன் காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு போகும் வழியில், போலீஸிடம் சிக்கி துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகிறான்.
கனவில் நடப்பதெல்லாம் நிஜத்தில் நடக்கும் நிலையில், அவன் என்ன மனநிலைக்கு ஆளாகியிருப்பான், எந்தளவுக்கு அவஸ்தைப் பட்டிருப்பான் என யோசித்துப் பாருங்கள். அதுதான் படத்தின் கதை. அவன் சுடப்பட்டானா இல்லையா என்பது கிளைமாக்ஸ்.
ராமாக வருகிற நாயகன் சதா நாடாருக்கு பயப்படுவதை, பதற்றப்படுவதை அதற்கேற்ற உடல்மொழியில் வெளிப்படுத்த தெரிந்திருக்கிறது. கதையின் பெரும்பாலான காட்சிகளுக்கு அதுதான் தேவைப்படுகிறது. அடுத்ததாக சொந்த மனைவியே படத்திலும் மனைவி என்பதால் முத்தக் காட்சி, குளியல் காட்சி என தாறுமாறாய் புகுந்து விளையாடியிருக்கிறார்.
சதாவின் மனைவி மோனிகா செலேனா. கனவு கண்டு திடீர் திடீரென எழுந்து தன் தூக்கத்தைக் கெடுக்கும் கணவன் மீது எரிச்சல் உணர்வைக் கொட்டினாலும் நிலைமை புரிந்து அரவணைக்கும்போது மனதில் நிறைகிறார். தனது இளமையை, அதன் பளபளப்பை, தளதளப்பை தயக்கமின்றி திரையில் பரிமாறிருக்கிறார்.
சதாவுக்கு மாமாவாக வருகிறவரும் அவருடைய நண்பரும் உணவில் வைக்கப்படும் ஊறுகாய் அளவுக்கும் குறைவாக ரசிக்கும்படி காமெடி செய்திருக்கிறார்கள். இயக்குநர்கள் அவர்களுக்கு இன்னும் சில காட்சிகளை உருவாக்கியிருக்கலாம்.
படத்தில் இவர்களைத் தவிர பாலியல் தொழிலாளி, காவல்துறை அதிகாரி என இன்னும் ஒருசிலர் மட்டுமே நடித்திருக்க, அவர்களின் பங்களிப்பு நிறைவாக இருக்கிறது.
பாடல்களில் இதம் தந்திருக்கும் இ ஜே ஜான்சனின் பின்னணி இசையில் காட்சிகளின் பரபரப்புக்கேற்ப ஏற்ற இறக்கங்கள் கதையோட்டத்துக்கு பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவில் குறையில்லை.
கனவு, கனவுக்குள் கனவு என சுவாரஸ்யமான கதைக்களத்தை உருவாக்கிய இயக்குநர்கள் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்.