தெரியாமல் செய்த கொலையை மறைக்க முயற்சி செய்யும் இளைஞன், வெறொரு பிரச்சனையிலும் சிக்கித் திணறுகிறான். இரண்டு பிரச்சனைகளில் இருந்தும் அவனால் மீண்டு வர முடிந்ததா இல்லையா என்பதே ‘இடி மின்னல் காதல்’ தருகிற திரை அனுபவம். இயக்கம் பாலாஜி மாதவன்
தான் கார் ஓட்டியபோது நடந்த விபத்தில் ஒருவர் மரணமடைந்துவிட, அதை போலீஸுக்கு தெரியாமல் மறைத்துவிட்ட குற்றவுணர்ச்சிக்கு ஆளாவது, சிறுவன் ஒருவனை கொலைகாரனிடமிருந்து காப்பாற்றுவது என நீளும் காட்சிகளில் பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார் நாயகன் சிபி.
நாயகி பவ்யா திரிகா அழகாக இருக்கிறார். காதலன் போலீஸ் பிடியில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து அக்கறையுடன் அரவணைப்பதில் அளவான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
வில்லனாக வருகிற வின்சென்ட் நகுலின் கண்கள் மிரட்டுகிறது.
சிறுவன் ஆதித்யா, தந்தையை இழந்த வலியை தனது முரட்டுத்தனமான செயல்பாடுகளால் உணர்த்த, பாலியல் தொழிலாளியாக வருகிற யாஸ்மின் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் அத்தனைப் பேரும் கதைக்களத்துக்கேற்ற நடிப்பைத் தந்திருக்கின்றனர்.
பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அத்தனையும் கதைக்களத்தை தாங்கிப் பிடிக்கின்றன.
அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பைத் தூண்டுகிற கதையை யோசித்த இயக்குநர், திரைக்கதையில் விறுவிறுப்பு கூட்டியிருந்தால் இடி மின்னல் காதலை ரசிகர்கள் அதிகளவில் காதலித்திருப்பார்கள்.