அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ள ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி, அழகம்பெருமாள், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படம் எதிர்வரும் மார்ச் மாதம் 7-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், படத்தை தயாரித்து நடித்திருக்கிற ஜீ.வி. பிரகாஷ் குமார் பேசியபோது, ”இது ஒரு பெரிய கனவு தான். ஹாலிவுட் வெளியாகும் ஹாரி பாட்டர் போன்ற படங்களை பார்க்கிறோம். இதுபோல் ஏன் நம்மளால் உருவாக்க முடியாது என யோசிப்பேன். அவர்கள் அவர்களுடைய பாட்டி கதையை எடுக்கும் போது நாம் நம்முடைய பாட்டி கதையை எடுக்கலாமே என யோசித்தோம். நம்ம ஊரு பாட்டி கதை போன்ற கதை தான் கிங்ஸ்டன்.
ஒரு ஃபேண்டஸி. அதை நம்முடைய கதைக்களத்திலிருந்து சொல்ல வேண்டும். அதாவது நம்ம ஊரு ஹாரி பாட்டர் எப்படி இருப்பார்? என்றெல்லாம் யோசித்ததால் உருவான கதைதான் இது.
உலகநாயகன் கமல் சாரிடம் எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் தொடங்கும் முதல் படத்தின் முதல் காட்சியை நீங்கள் தான் இயக்க வேண்டும் என்று என் விருப்பத்தை சொன்னேன். அவரும் எந்தவித மறுப்பும் செல்லாமல் உடனடியாக வந்து இயக்கி தந்தார். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் கமல் பிரகாஷ், ”இந்த நாளுக்காக நான் எத்தனை நாள் கடுமையாக உழைத்திருக்கிறேன், கனவு கண்டிருக்கிறேன் என்பதை விட, இந்தப் படத்திற்கான எங்களுடைய உழைப்பு நிச்சயமாக திரையில் பேசும் என நம்புகிறேன்.
நான் மிகக் குறைந்த பட்ஜெட்டில் குறும்படங்களை இயக்குபவன். ஆனால் நமக்கு ஒரு ஐடியா தோன்றும். அந்த ஐடியாவிற்கு பட்ஜெட் கிடையாது. ஜீவி பிரகாஷ் சாரிடம் தொடர்ந்து ஆறாண்டுகள் பயணித்திருக்கிறேன் அந்தப் பயணத்தில் ஒரு நாள் இப்படத்தை பற்றிய ஐடியாவை அவரிடம் சொன்னேன். 20000 ரூபாயில் குறும்படம் இயக்கும் என்னை நம்பி கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் முதலீடு செய்து ‘கிங்ஸ்டன் ‘ திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் தயாரிப்பாளரான ஜீ வி பிரகாஷ் குமார். இதற்காக அவருக்கு முதலில் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வலிமை ..அதன் உருவாக்கம் தான். இதற்காக தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பை வழங்கிய ஒளிப்பதிவாளர் -கலை இயக்குநர்- படத்தொகுப்பாளர் – சண்டை பயிற்சி இயக்குநர் – வி எஃப் எக்ஸ் குழு – ஆகிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்தின் திரைக்கதையில் ஆக்சன் தனித்து இல்லாமல் திரைக்கதையுடன் இணைந்தே இருக்கும். இதனால் சண்டை பயிற்சி இயக்குநர் திலிப் சுப்பராயனின் பங்களிப்பும் அதிகம். இதனால் திட்டமிட்ட நாட்களுக்குள் திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்தோம்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் சேத்தன்- அழகம்பெருமாள்- குமரவேல்- ஆகியோர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
நடிகை திவ்யபாரதி பேசுகையில், ” இந்த படத்தின் கதையை இயக்குநர் கமல் பிரகாஷ் என்னிடம் சொல்லும் போது எந்த மாதிரியான தோற்றத்தில் கதாபாத்திரமாக திரையில் தோன்ற வேண்டும் என்பதற்கான முன்மாதிரி வீடியோ ஒன்றினை காண்பித்தார். அதை பார்த்தவுடன் நிச்சயம் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். ‘பேச்சுலர்’ படத்திற்குப் பிறகு ஜீவி பிரகாஷ் குமாருடன் இரண்டாவது முறையாக இணைந்து நடித்திருக்கிறேன். மிகவும் இனிமையாக பழகக்கூடியவர். நான் சில படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஜீவி பிரகாஷ் குமாருடன் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் வெளியாகிறது. இதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.