விஜய் ஆண்டனி நடிக்க, தனா இயக்கியுள்ள ‘ஹிட்லர்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் தனா பேசியபோது, ”இது நல்ல ஆக்சன் படம், ஒரு பக்கம் விஜய் ஆண்டனி சார், இன்னொரு பக்கம் கௌதம் மேனன் சார் கொஞ்சம் தயக்கமாக இருந்தது, ஆனால் அவர்கள் தந்த ஒத்துழைப்பில் தான், இந்தக்கதையைச் சிறப்பாகச் செய்தேன். நடிகர்கள் மற்றும் குழுவினர் முழு உழைப்பைத் தந்துள்ளனர். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் கம்ர்ஷியல் ஆக்சன் படமாக இருக்கும்” என்றார்.
நடிகர் விஜய் ஆண்டனி பேசியபோது, ”கௌதம் சாருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முன்பு அவர் படத்தில், இசையமைக்க வாய்ப்பு கேட்டு அலைந்திருக்கிறேன், இந்தப்படத்தில் அவருடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி. தனா மிகச்சிறந்த இயக்குநர் படத்தை மிக அற்புதமாக எடுத்துள்ளார். ரியா உங்களின் மன்மத லீலை பார்த்தேன், அந்தளவு இல்லை என்றாலும் இதில் ரொமான்ஸ் இருக்கிறது. வந்த சில படங்களில், நீங்கள் தமிழ் கற்றுக்கொண்டு பேசுவது, ஆச்சரியமாக இருக்கிறது. விவேக் மெர்வின் ரசிகன் நான், உங்கள் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். எடிட்டர் மிகச்சிறப்பாக எடிட் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், விவேக் பிரசன்னா எல்லாம் நன்றாக நடித்துள்ளார்கள். ராஜா பல தடைகளைக் கடந்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப்படத்தில் நாங்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை, எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரியான ஜாலியான, ஆக்சன் படமாக இப்படம் இருக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.
இயக்குநர் கௌதம் மேனன் பேசியபோது, ”இந்த படம் பண்ண ரெண்டே காரணம் தான். தனா, அவர் விஜய் ஆண்டனி நீங்கள் தான் நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டார் என்று சொன்னார். பொதுவாக நான் நடிக்கத் தயங்குவேன், எனக்கு இந்தப்படத்தில் அவ்வளவு கம்பர்டபிளாக வைத்துக் கொண்டார்கள். விஜய் ஆண்டனி ஆசைப்பட்டதால் தான் இந்தப்படத்தில் நடித்தேன் நன்றி. இந்தப்படத்தில் மிகப்பெரிய கதை இருக்கிறது, அதை தனா இயக்கிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விஜய் ஆண்டனி விபத்தைத் தாண்டி ஒரே மாதத்தில் நடிக்க வந்தது வியப்பாக இருந்தது. இந்தப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி. ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இப்படம் இருக்கும்” என்றார்.