விஜய் ஆண்டனி கதாநாயகனான நடிக்க, தனா இயக்கி, விரைவில் திரைக்கு வரவுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் ‘ஹிட்லர்.’ ரியா சுமன் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் கௌதம் மேனன், சரண்ராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ‘ஆடுகளம்’ நரேன், இயக்குநர் தமிழ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் தனா பேசியபோது, ‘‘இந்த படத்தில் 500 பேருக்கும் மேற்பட்டோரின் பங்கு இருக்கிறது. விஜய் ஆண்டனி சார், கௌதம் மேனன் சார் என எல்லோருமே அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். இந்தப்படம் முன்பே வந்திருக்க வேண்டியது. விஜய் ஆண்டனி சாருக்கு நடந்த எதிர்பாராத ஆக்ஸிடெண்ட் படத்தைத் தாமதமாகியது. அந்த ஆக்ஸிடெண்ட் நடந்து அவர் எங்களுக்காக விரைவாக எழுந்து வந்தார். அவரது அர்ப்பணிப்பு வியப்பானது.
‘ஹிட்லர்’ எனது முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டது. ஒரு ஆக்சன் திரில்லர் படம். படத்தைப் பார்த்த போது எங்களுக்கு நிறைவாக இருந்தது அதை நீங்களும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
நடிகர் விஜய் ஆண்டனி, ‘‘இயக்குநர் தனாவின் ‘வானம் கொட்டட்டும்’ படத்திற்கு நான் மிகப்பெரிய ஃபேன். நானும் தயாரிப்பாளர் ராஜா சாரும் யாரை வைத்து அடுத்த படம் எடுக்கலாம் என்றபோது இருவர் மனதிலும் வந்த பெயர் தனா. குறைந்த காலத்தில் ஒரு அழகான அவுட்புட்டை தந்துள்ளார். அவர் இன்னும் உயரம் செல்வார். ரெடின் கிங்ஸ்லி திரையில் வேறொரு நடிகராக காமெடியில் அசத்துகிறார். ரியா சுமன் சிம்பிளான மிகச் சிறந்த நடிகை. டாணாக்காரன் தமிழ், கௌதம் மேனன் இருவருடனும் நடித்தது மகிழ்ச்சி. விவேக் பிரசன்னா நடிப்பு மிகவும் பிடிக்கும்.
ஆக்ஸிடெண்டுக்குப் பிறகு என்னைப் பூப்போல பார்த்துக்கொண்டார் ஸ்டண்ட் மாஸ்டர் முரளி. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.
நடிகர் விவேக் பிரசன்னா, ‘‘இயக்குநர் தனா இதுவரை நான் நடித்த படத்தில் இல்லாத புதிய ரியாக்சனை இப்படத்தில் என்னிடம் கொண்டுவந்தார். விஜய் ஆண்டனி சாருடன் பல காலமாக இணைந்து நடிக்க ஆசைப்பட்டேன், இப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. மக்களை அடிமையாக நடத்தினார் அந்த ஹிட்லர்; இந்த ஹிட்லர் மக்களின் நன்மைக்காக அதிகாரத்தை கையில் எடுத்துள்ளான்” என்றார்.
நிகழ்வில் கதாநாயகி ரியா சுமன், நடிகரும் இயக்குநருமான தமிழ், நடிகர் ரெடின் கிங்ஸ்லி, தயாரிப்பாளர் டிடி ராஜா, எடிட்டர் சங்கத்தமிழன், காஸ்ட்யூமர் அனிஷா, ஸ்டண்ட் மாஸ்டர் முரளி, இசையமைப்பாளர் விவேக் & மெர்வின் உள்ளிட்டோரும் பேசினார்கள்.