அஜித்குமாருக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட கேங்ஸ்டர் கதைக்களத்தில் விரிகிறது ‘குட் பேட் அக்லி.’
மும்பையின் மிகப்பெரிய கேங்ஸ்டராக இருக்கிற ஏ கே, தன் மனைவியின் விருப்பத்தை ஏற்று நல்லவராக மாறுகிறார். அந்த காலகட்டமாகப் பார்த்து அவருடைய மகன் கடத்தப்பட, ஏகே’வுக்கு தான் மீண்டும் கேங்ஸ்டராக வேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது; அவருக்கு தோன்றுவதில் ஆச்சரியமில்லை; அவரது மனைவிக்கும் அப்படியே தோன்றுகிறது. அப்புறமென்ன, ஏகே மீண்டும் கேங்ஸ்டராகிறார். எதிரிகளை வேட்டையாடுகிறார்.
இந்த சிம்பிளான கதையை எடுத்துக்கொண்டு சண்டைக் காட்சிகளாலும், பழைய பாடல்களைக் ஆங்காங்கே எடுத்துப் பொருத்தியும் ரசிகர்களை குஷியில் குதிக்க வைத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
அஜித் வழக்கத்தைவிட படு ஸ்டைலாக வருகிறார்; காஸ்ட்யூம்களும் கலக்கலாக கலர்ஃபுல்லாக இருக்கிறது. துப்பாக்கியை எடுத்தால், மெஷின் கன்னை சுழற்றினால் 100 பேரையாவது பரலோகத்துக்கு அனுப்பாமல் ஓய்வதில்லை. பின்னணியில் பழைய கிளாஸிக் பாடல்கள் ஒலிக்க ரகளையாக அவர் போடும் ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கு சென்று திரும்புகிறார்கள். சென்டிமென்ட் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.
வில்லனாக கடமையாற்றும் பொறுப்பை அர்ஜுன் தாஸ் கையில் ஒப்படைக்க, அசத்தலான லுக்கில் வரும் அவர் டெரராக இறங்கியடித்திருக்கிறார்.
அன்பான மனைவியாக, பாசமான தாயாக கண்டிப்பும் கனிவும் காட்டியிருக்கிறார் த்ரிஷா.
ஏகே – த்ரிஷா தம்பதியின் மகனாக வருகிற கார்த்திகேயா தேவின் நடிப்பில் பரபரப்பு தெரிகிறது.
ஜாக்கி ஷெராப், சிம்ரன், ஷயாஜி சிண்டே, ரெடின் கிங்ஸ்லி என திரும்பிய பக்கமெல்லாம் பிரபலமான நடிகர்கள், நடிகைகள்… எல்லோருக்குமே முக்கியத்துவம் இருக்கிறது. யோகிபாபுவும் அப்படி வந்து இப்படி போகிறார்.
பின்னணி இசையில் அதிரடி அதிகம்; ‘திரையரங்கம் செதறட்டும்’ பாடல் ரகளை. போனஸாக நான்கைந்து பழைய பாடல்களை முழுமையாகப் பயன்படுத்தியதில் ரசிகர்கள் வைப்ரேட் மோடுக்கு போய்வருகிறார்கள்.
அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு, கலை இயக்குநரின் பங்களிப்பு, அனுவர்தனின் ஆடை வடிவமைப்பு அத்தனையும் படத்தின் பலம்.
அஜித் நடித்த மங்காத்தா, வீரம், ரெட், வாலி என பல படங்களின் ரெபரன்ஸோடு உருவாகியிருப்பதால் தியேட்டர்களில் களைகட்டுகிறது ரசிகர்களின் திருவிழா கொண்டாட்டம்!
குட் பேட் அக்லி _ ரசிகர்களுக்கு ஜாலி!
Rating 3.5 / 5