குறும்படங்கள் எடுத்து திறமையை நிரூபித்த ஒருவன், திரைப்படம் இயக்கும் வாய்ப்புக்காக போராடும் கதை.
நல்ல படைப்பை பவுண்டட் ஸ்கிரிப்டாக கையில் வைத்துக் கொண்டு, திரைப்படம் இயக்குவதற்காக தயாரிப்பாளரை தேடிக் கொண்டிருக்கிற அந்த இளைஞனுக்கு யாரும் வாய்ப்பு தருவதாயில்லை. தொடர் முயற்சியின் பலனாக, ஒருவர் அவனிடம் கதை கேட்டு பிடித்துள்ளதாக சொல்லி, அட்வான்ஸ் தருகிறார். ஆனாலும் சில காரணங்களால் அவன் நினைத்தபடி படம் இயக்க முடியாமல் போகிறது; கதையும் பறிபோகிறது.
‘போனது போகட்டும்; கவலையை விடு, நாமே படம் தயாரிக்கலாம்’ என்று அவனுக்கு நம்பிக்கை தருகிறார் அவனது மூத்த அண்ணன். படம் தயாரிக்கும் அளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. அப்புறம் எந்த தைரியத்தில் அவர் சொன்னார்? சொன்னபடி அவரால் படம் தயாரிக்க முடிந்ததா? தம்பியை இயக்குநராக்க முடிந்ததா?
இந்த கேள்விகளுக்கான பதில்களாய் விரிகிறது இயக்குநர் செல்வா குமார் திருமாறனின் திரைக்கதை…
தயாரிப்பாளரை தேடி அலைவதில் காட்டும் பரபரப்பு, வாய்ப்பு கிடைத்தபின் வேலையில் காட்டும் சுறுசுறுப்பு என ஆரம்பக் காட்சிகளில் துடிப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கும் நாயகன் உதய் கார்த்திக், சூழ்ச்சிக்கு ஆளாகி மனம் உடைவது, குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு முன்னேற்றத்தின் படிகளில் உற்சாகமாக ஏறுவது என நீளும் காட்சிகளில் வெளிப்படுத்தியிருக்கும் உணர்வுகள் கச்சிதம்.
வாயில் வடை சுடுகிறவர்கள் போல் அலட்டலாக பேசுவது, அப்படியே விட்டுவிடாமல் செயல்பாட்டிலும் கெத்து காட்டுவது என மூத்த அண்ணனாக வருகிற விவேக் பிரசன்னாவின் நடிப்பு அசத்துகிறது.
இன்னொரு அண்ணனாக வருகிற பார்த்திபன் குமார், அம்மாவாக ஸ்ரீஜாரவி என மற்றவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
கதாநாயகனை காதலிப்பதை தவிர வேறெந்த கடமையுமில்லை கதாநாயகி சுபிக்ஷாவுக்கு.
ஒருசில காட்சிகளில் வந்தாலும் பட்டிமன்றப் பேச்சாளர் மோகன சுந்தரம் தனித்து தெரிகிறார்.
பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத் தொகுப்பு அனைத்தும் நேர்த்தி.
கதையின் போக்கு எதிர்பார்த்தபடியே அமைந்திருப்பது படத்தின் பலவீனம் என்றாலும்,
ஆச்சரியப்படுத்தும் அண்ணன் தம்பி பாசம், குடும்பத்தின் ஆதரவு இருந்தால் யார் வேண்டுமானாலும் நினைத்ததை நிறைவேற்றலாம் என்ற தன்னம்பிக்கையை தருகிற திரைக்கதை, கலகலப்புக்கு குறைவில்லாத காட்சிகள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.
ஃபேமிலி படம் கணிசமாய் கிடைக்கிறது ‘ஃபீல் குட்’ அனுபவம்!