சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற கதைக்களத்தில் ‘எங்க வீட்ல பார்ட்டி.’
பேஸ்புக் மூலம் நண்பர்களான ஐந்து இளைஞர்கள், இரண்டு இளைஞிகள் ஒரு பார்ட்டியில் கலந்துகொண்டு, குடித்து போதையேறி ஒரு வீட்டுக்குப் போய் தங்குகிறார்கள். அதில் ஒரு பெண் கொலை செய்யப்பட, உடன் தங்கிய ஆறு பேர் மீதும் போலீஸின் சந்தேகப் பார்வை திரும்புகிறது.
அத்தனைப் பேருமே நடந்த கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என மறுக்க, விசாரணையில் முடிவில் ஆறு பேரில் ஒருவர், ‘ஆமாம் நான்தான் கொன்றேன்’ என்கிறார். அவர் யார், என்ன காரணம் என்பது கிளைமாக்ஸ்.
குடிபோதையால் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்பது புரியாமல் எதை வேண்டுமானாலும் செய்கிறவர்களை, ‘கே’, ‘லெஸ்பியன்’ என்றெல்லாம் வகைப்படுத்தப்படுகிற ஓரினச் சேர்க்கையாளர்களை கதையின் முக்கிய பாத்திரங்களாக வைத்து ‘எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் யாருக்கும் கெடுதல் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்’ என வருடிக் கொடுக்கிற பாணியில் வலியுறுத்தியிருக்கிறார் இயக்குநர் கே. சுரேஷ் கண்ணா.
யாத்ரா, சாசனா, ஹன்சி வர்கீஸ், சக்தி, ஒமேரா மேத்வின், தயூப், சாய் சதீஷ், கார்த்திகேயன், சிபு சரவணன் முதன்மைப் பாத்திரங்களில் வருகிறவர்கள் கதை எதிர்பார்க்கிற நடிப்பையும், நகைச்சுவையையும் பொருத்தமாகத் தந்திருக்கிறார்கள்.
காவல்துறை அதிகாரியாக வருகிற சிவபிரகாஷின் (இந்த படத்தின் தயாரிப்பாளர்) நடிப்பு நிறைவு. மற்ற பாத்திரங்களில் வருகிறவர்கள் முடிந்தவரை நன்றாக நடிக்க முயற்சித்திருக்கிறார்கள்.
காதலோடு ஒரு பாடல், காமத்தோடு இன்னொரு பாடல் என இரண்டையும் இதமான இசையில் தந்திருக்கிறார் கோபிஸ்ரீ.
எளிய கதைக்களத்துக்கேற்ற எளிமையான ஒளிப்பதிவு, முன்னும் பின்னுமாய் போய்வருகிற காட்சிகளை குழப்பமில்லாமல் தொகுத்திருக்கும் எடிட்டிங் என தொழில்நுட்பப் பங்களிப்பு கச்சிதம்.
சீரியஸான கதையை நகைச்சுவையோடு நகர்த்தி ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர், சமுகத்துக்கு விழிப்புணர்வுப் பாடம் நடத்தி ஏற்கவும் வைத்திருக்கிறார்.